காதலியுடன் தகராறு ஏற்பட்டதால் விரக்தி, தொழிலாளி தீக்குளித்து தற்கொலை - மூங்கில்துறைப்பட்டு அருகே பரிதாபம்


காதலியுடன் தகராறு ஏற்பட்டதால் விரக்தி, தொழிலாளி தீக்குளித்து தற்கொலை - மூங்கில்துறைப்பட்டு அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 2 Jun 2019 4:00 AM IST (Updated: 1 Jun 2019 10:56 PM IST)
t-max-icont-min-icon

மூங்கில்துறைப்பட்டு அருகே காதலியுடன் தகராறு ஏற்பட்டதால் விரக்தியடைந்த தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

மூங்கில்துறைப்பட்டு, 

திருவண்ணாமலை மாவட்டம் இளையாங்கண்ணி பகுதியை சேர்ந்தவர் அமல்ராஜ். இவரது மகன் பீலேகிளமன்ராஜ் (வயது 23), கரும்பு வெட்டும் தொழிலாளி. இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள கோணப்பன்கொட்டாய் பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் இடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் செல்போன் மூலமாகவும், நேரில் சந்தித்தும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பீலேகிளமன்ராஜ் தனது காதலியை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் கோணப்பன்கொட்டாய் பகுதிக்கு வந்தார். அங்கு அவர் தனது காதலியுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதில் மனமுடைந்த பீலேகிளமன்ராஜ் மோட்டார் சைக்கிளில் இருந்த பெட்ரோலை ஒரு கேனில் பிடித்து, அதை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் தீ பரவி எரிந்ததில் வலியால் அலறி துடித்தார். இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை பீலேகிளமன்ராஜ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலியுடன் தகராறு ஏற்பட்டதால் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story