திருவெண்ணெய்நல்லூர் அருகே, வேன் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் சாவு - டிரைவரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டம்


திருவெண்ணெய்நல்லூர் அருகே, வேன் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் சாவு - டிரைவரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 2 Jun 2019 3:45 AM IST (Updated: 1 Jun 2019 10:56 PM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் அருகே வேன் சக்கரத்தில் சிக்கி பள்ளி மாணவன் இறந்தான். விபத்துக்கு காரணமான டிரைவரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசூர், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தை சேர்ந்தவர் மாயவேல். இவர் பெரியசெவலையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் முகுந்தன் (வயது 7). இவன் திருவெண்ணெய்நல்லூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் படித்து வந்தான்.

மாணவன் முகுந்தன் படித்து வந்த தனியார் பள்ளியில், கோடை விடுமுறை முடிந்து நேற்று முதல் பள்ளி திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கியது. முகுந்தனை அவனது பெற்றோர் வழக்கம்போல் காலையில் பள்ளி வேனில் அனுப்பி வைத்தனர். அவன் 2-ம் வகுப்பில் சேர்ந்து படித்தான்.

இந்நிலையில் பள்ளி திறக்கப்பட்டு முதல் நாள் என்பதால் நேற்று மதியம் வரை வகுப்புகள் நடந்தது. வகுப்புகள் முடிந்ததும் மாணவ- மாணவிகளை ஏற்றிக்கொண்டு வேன் புறப்பட்டது. வேனை தக்கா கிராமத்தை சேர்ந்த ராமராஜன் (31) என்பவர் ஓட்டிச்சென்றார். சிறுமதுரை முருகன் கோவில் அருகே மதியம் 1.30 மணியளவில் வேன் வந்து நின்றது. அதிலிருந்து மாணவன் முகுந்தன் கீழே இறங்கினான்.

அப்போது படிக்கட்டில் இருந்து எதிர்பாராதவிதமாக முகுந்தன் தவறி கீழே விழுந்தான். இதை கவனிக்காத டிரைவர், வேனை இயக்கினார். இதில் வேனின் அடியில் சிக்கிக்கொண்ட முகுந்தனின் மீது சக்கரம் ஏறியதில் அவன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். உடனே வேனை அங்கேயே நிறுத்திவிட்டு அதன் டிரைவர் ராமராஜன் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

இதை பார்த்ததும் முகுந்தனின் தாய் பதறியடித்துக்கொண்டு அங்கு ஓடி வந்தார். பின்னர் தனது மகனின் உடலை கட்டிப்பிடித்து அவர் கதறி அழுதார். இந்த சம்பவத்தை பற்றி கேள்விப்பட்டதும் முகுந்தனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். இவர்கள் அனைவரும் திடீரென அந்த பள்ளி வேனை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். அப்போது மாணவனின் சாவுக்கு காரணமான வேன் டிரைவரை உடனடியாக கைது செய்யக்கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விபத்துக்கு காரணமான வேன் டிரைவரை கைது செய்ய விரைந்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர்.

இதனை ஏற்ற பொதுமக்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு மாணவன் முகுந்தனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் ராமராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story