எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடா? அமைச்சர் காமராஜ் பதில்


எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடா? அமைச்சர் காமராஜ் பதில்
x
தினத்தந்தி 2 Jun 2019 4:30 AM IST (Updated: 2 Jun 2019 12:05 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடு உள்ளதா? என்ற கேள்விக்கு அமைச்சர் காமராஜ் பதில் அளித்துள்ளார்.

நன்னிலம்,

அ.தி.மு.க. சாதாரண மக்களை இணைத்து கொண்ட இயக்கம். நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி தொடர வேண்டும் என்று வாக்களித்துள்ள மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது ஊர், ஊராக சென்று ராகுல்காந்தி பிரதமர் ஆவார், உடனடியாக அ.தி. மு.க. ஆட்சி அகற்றப்படும் என்றார். இந்த இரண்டிலும் அவர் தோற்று விட்டார். அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற முடியாது. அவர் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்தார். 2 ஏக்கர் நிலம் தருவதாக கூறி முன்பு ஆட்சிக்கு வந்தனர். ஒருவருக்கு கூட நிலம் கொடுக்கவில்லை. வாழையடி வாழையாக பொய் சொல்கின்றனர். தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி தொடர்கிறது. இந்தியாவில் மோடி தலைமையிலான ஆட்சி தொடர்கிறது. எடப்பாடி பழனிசாமி வலியான முதல்-அமைச்சர் என்பதை விரைவில் நிருபிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

ரேஷன் கார்டுகள் விரைவில் வழங்கப்படும்

தொடர்ந்து அவரிடம் ரேஷன் கார்டு வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளதே? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், தேர்தல் விதிமுறைகள் காரணமாக ரேஷன் கார்டுகள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது ஒரு கோடியே 99 லட்சத்து 48 ஆயிரத்து 865 ‘ஸ்மார்ட் கார்டுகள்’ புழக்கத்தில் உள்ளன.

1.1.2019 முதல் நேற்று வரை 2 லட்சத்து 63 ஆயிரத்து 432 புதிய ரேஷன் கார்டுக்கு மனுக்கள் பெறப்பட்டு அது பரிசீலிக்கப்பட்டு ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 181 ரேஷன் கார்டுகள் பரிசீலனை செய்து அச்சிடப்பட உள்ளது. விரைவில் அவைகள் வழங்கப்படும் என்றார்.

கருத்து வேறுபாடு

மோடி அலையால் தான் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததாக மாபா பாண்டியராஜன் கூறியது குறித்து கேட்டதற்கு அவர் என்ன சொன்னார் என்று எனக்கு தெரியாது. தமிழகத்தை பொறுத்தவரையில் அம்மா ஆட்சி தொடர வாக்களித்துள்ளனர். இந்தியாவில் மோடி ஆட்சி அமைந்துள்ளது. இதில் 2-வது கருத்து இருக்க முடியாது என்றார்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடு உள்ளதா? என கேட்டதற்கு எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. இரண்டு பேரும் இணைந்து செயல்படுகின்றனர் என்றார்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story