திருவாரூர்-காரைக்குடி இடையே ரெயில் போக்குவரத்து: ரெயில்வே கேட் மூடப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல்


திருவாரூர்-காரைக்குடி இடையே ரெயில் போக்குவரத்து: ரெயில்வே கேட் மூடப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 1 Jun 2019 10:45 PM GMT (Updated: 1 Jun 2019 6:52 PM GMT)

திருவாரூர்-காரைக்குடி இடையே நேற்று முதல் ரெயில் போக்குவரத்து தொடங்கியது. இதற்காக ரெயில்வே கேட் மூடப்பட்டதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான வாகனங்கள் நெரிசலில் சிக்கின.

திருத்துறைப்பூண்டி,

காரைக்குடியில் இருந்து திருவாரூர் வரை அகல ரெயில் பாதை பணிகளுக்காக 2012-ம் ஆண்டு முதல் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து முதல் கட்டமாக காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை வரை 73 கி.மீ. தூரம் அகல ரெயில் பாதை பணிகள் முடிவடைந்து கடந்த ஆண்டு மார்ச் 30-ந் தேதி முதல் இந்த வழித்தடத்தில் ரெயில் இயக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக பட்டுக்கோட்டையில் இருந்து திருவாரூர் வரை 75 கிலோ மீட்டர் தூரம் உள்ள அகல ரெயில் பாதையில் பணிகள் முடிவடைந்தது. திருவாரூர்-காரைக்குடி இடையிலான அகல ரெயில் பாதையில் பணிகள் முடிவடைந்து கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி விரைவு சோதனை ஓட்டம் திருவாரூரில் இருந்து பட்டுக்கோட்டை வரை நடந்தது. சோதனை ஓட்டம் நடைபெற்று ஒரு மாதம் ஆகியும் ரெயில் இயங்கப்படாததால் அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டு ரெயிலை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று திருவாரூரில் இருந்து காரைக்குடி வரையிலான ரெயில் போக்குவரத்து தொடங்கியது. திருத்துறைப்பூண்டி வந்த ரெயிலுக்கு வர்த்தக சங்கம் சார்பில் மேள, தாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வர்த்தக சங்க தலைவர் செந்தில்குமார் தலைமையில் பொதுமக்கள், ரெயில் பயணிகள் கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்றனர்.

பின்னர் வர்த்தக சங்கத்தினர், ரெயில் ஓட்டி வந்த டிரைவர் மற்றும் ரெயில்வே அதிகாரிகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் ரெயில் போக்குவரத்து தொடங்கியதால் திருத்துறைப்பூண்டி- மன்னார்குடி சாலையில் ரெயில்வே கேட் மூடப்பட்டது. இதனால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த ரோட்டின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்கார்த்திகுமார், இன்ஸ்பெக்டர் அன்பழகன், சப்-இன்ஸ்பெக்டர் வாகிஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்கு வரத்தை சரி செய்தனர். இதனால் அங்கு 1 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஒரு ரெயில் வந்தபோதே இவ்வளவு போக்குவரத்து நெரிசல் என்றால் இந்த பாதையில் நாள்தோறும் 10-க்கும் மேற்பட்ட ரெயில்கள் கடந்து செல்லும்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வர்த்தக சங்கத்தினர், அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story