தொழில்வரி ரசீது வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம்: கைதான உதவியாளர் பணி இடைநீக்கம்


தொழில்வரி ரசீது வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம்: கைதான உதவியாளர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 2 Jun 2019 4:30 AM IST (Updated: 2 Jun 2019 12:24 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் நகராட்சியில் தொழில்வரி ரசீது வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கி, கைதான வருவாய் உதவியாளரை பணி இடைநீக்கம் செய்து ஆணையாளர் சுதா உத்தரவிட்டு உள்ளார்.

நாமக்கல், 

நாமக்கல் - துறையூர் சாலையில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருபவர் இலக்கிய செல்வன் (வயது 32). இவருக்கு கடன் உதவி பெற தொழில்வரி ரசீது தேவைபட்டது. இதையடுத்து தொழில்வரி ரசீது வழங்கக்கோரி அவர் நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தார். அவரிடம் நகராட்சி வருவாய் உதவியாளர் வரதராஜூ (50), தொழில்வரி ரசீது வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டார். ஆனால் இலக்கிய செல்வன் ரூ.2 ஆயிரம் மட்டுமே தருவதாக கூறினார்.

பின்னர் லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத இலக்கிய செல்வன் இது குறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து போலீசார் கொடுத்த ஆலோசனையின் பேரில் ரசாயன பவுடர் தடவிய ரூ.2 ஆயிரத்தை இலக்கிய செல்வன், வரதராஜூவிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த போலீசார் வரதராஜூவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே கைதான உதவியாளர் வரதராஜூ மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு போலீசார் நகராட்சி அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்தனர். அவர்களின் பரிந்துரையை ஏற்று நகராட்சி ஆணையாளர் சுதா, உதவியாளர் வரதராஜூவை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.

இதேபோல் மோகனூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.4,500 லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இளநிலை உதவியாளர் காந்திமதியையும் பணியிடை நீக்கம் செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசார் பரிந்துரை செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story