சேலம் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்
சேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பனமரத்துப்பட்டி,
சேலம்-சென்னை இடையே மத்திய அரசின் சார்பில் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் 8 வழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த திட்டத்துக்கு விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தனர். இந்த நிலையில் மத்திய அரசின் சார்பில் ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் மேல்முறையீட்டை மத்திய, மாநில அரசுகள் திரும்ப பெற வேண்டும் எனக்கூறி சேலத்தில் நேற்று முன்தினம் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து நேற்று சேலம் மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டி பகுதியில் விவசாயிகள் 2-வது நாளாக தொடர்ந்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்தும், அரசு இந்த வழக்கில் மேல் முறையீடு செய்ததை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த திட்டத்தை மத்திய,மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்றும், சுப்ரீம் கோர்ட்டில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும், எந்த காரணத்திற்காகவும் விவசாய நிலங்களை விட்டுத்தர மாட்டோம் என்றும், அதற்காக விவசாயிகள் அனைவரும் இணைந்து தொடர்ந்து போராடுவோம் என்றும் கோஷமிட்டனர்.
தேர்தல் முடிந்த சில நாட்களிலேயே மத்திய, மாநில அரசுகள் 8 வழிச்சாலை திட்டத்துக்கு உடனடியாக தீவிரம் காட்டுவதை வன்மையாக கண்டிக்கிறோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டனங்களை தெரிவித்தனர்.
இதன் பின்னர் விவசாயிகள் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்கள். கூட்டத்தில் 8 வழிச்சாலைக்கு ஆதரவாக மனு செய்த மத்திய அரசை கண்டித்து அறிக்கை வெளியிட்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை பாராட்டி நன்றி தெரிவித்து விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றினர்.
மேலும் 8 வழிச்சாலையால் பாதிக்கப்படும் அனைத்து மாவட்ட விவசாயிகளையும் இணைத்து பெரிய அளவில் போராட்டம் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Related Tags :
Next Story