பூமிக்கு அடியில் கிடைத்ததாக கூறப்பட்ட ஐம்பொன்சிலையை பறிமுதல் செய்ய வந்த அதிகாரிகள்
தேன்கனிகோட்டை அருகே பூமிக்கு அடியில் கிடைத்ததாக கூறப்பட்டஐம்பொன்சிலையை பறிமுதல் செய்ய வந்த அதிகாரிகளிடம் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது வெங்கடாபுரம் கிராமம். இந்த கிராமத்தில் பழமை வாய்ந்த வெங்கடரமண சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 2 அடி உயரமுள்ள ஐம்பொன்னால் ஆன பெருமாள் சிலை உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கோவில் சிதிலமடைந்து காணப்படுகிறது.
இதன் காரணமாக கோவிலை புதுப்பிக்க ஊர்பொதுமக்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி கோவிலில் இருந்த பெருமாள் சிலை பூசாரி முனிராஜ் என்பவரது வீட்டில் வைக்கப்பட்டது. சனிக்கிழமை தோறும் இந்த ஐம்பொன்சிலை கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த கோவிலை புனரமைக்கும் பணியின் போது பூமிக்கு அடியில் இருந்து ஐம்பொன் சிலை கிடைத்ததாகவும் அதனை கோவில் நிர்வாகத்தினர் எடுத்து வைத்துள்ளதாகவும் தேன்கனிக்கோட்டை வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில் தேன்கனிக்கோட்டை தாசில்தார் முத்துப்பாண்டி, துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா மற்றும் வருவாய்த்துறையினர், போலீசார் வெங்கடாபுரம் கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதையொட்டி கிராம மக்களிடம் பூமிக்கு அடியில் கிடைத்ததாக கூறப்படும் ஐம்பொன் சிலையை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிலையை பறிமுதல் செய்ய விடாமல் எதி்ர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கிராமமக்கள், அந்த ஐம்பொன் பெருமாள் சிலை தங்கள் ஊரில் உள்ள வெங்கடரமண சாமி கோவிலுக்கு சொந்தமானது என்றும், சிலை 65 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டது எனவும், அதனை கோவிலில் வைத்து தாங்கள் பூஜைகள் நடத்தி வருகிறோம் எனவே, இந்த இந்த சிலையை அதிகாரிகள் எடுத்து செல்ல அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி வாக்குவாதம் செய்தனர்.
இதுகுறித்து அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் அங்கு திரண்டு வந்தனர். மேலும் அதிகாரிகளை சிலையை எடுக்க விடாமல் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் பெருமாளை சுற்றி நின்று சூழ்ந்து கொண்டனர். இதனையடுத்து அதிகாரிகள் சிலையை எடுக்காமல் அங்கிருந்து திரும்பி சென்றனர். மேலும், இந்த ஐம்பொன்சிலை தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story