விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால், பறிக்காமல் மரத்திலேயே காயும் முருங்கைக்காய் - விவசாயிகள் வேதனை


விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால், பறிக்காமல் மரத்திலேயே காயும் முருங்கைக்காய் - விவசாயிகள் வேதனை
x
தினத்தந்தி 2 Jun 2019 3:45 AM IST (Updated: 2 Jun 2019 12:44 AM IST)
t-max-icont-min-icon

முருங்கைக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் மரங்களில் பறிக்காமலேயே காய்கள் காய்ந்து வீணாகி வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தேனி,

தேனி மாவட்டத்தில், ஆண்டிப்பட்டி, கண்டமனூர், மரிக்குண்டு, எம்.சுப்புலாபுரம், கணேசபுரம், கடமலைக்குண்டு, தப்புக்குண்டு, தாடிச்சேரி, கொடுவிலார்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் முருங்கை சாகுபடி நடக்கிறது. இங்கு விளைச்சல் அடையும் முருங்கைக்காய் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கும், திண்டுக்கல், மதுரை, சென்னை போன்ற பகுதிகளுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முருங்கைக்காய் நல்ல விலை போனது. அதன்பிறகு விளைச்சல் அதிகரிப்பு காரணமாக விலை வீழ்ச்சி அடையத் தொடங்கியது. தற்போது விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது.

ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ ரூ.5 முதல் ரூ.8 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.

காய்களை பறித்து, சந்தைக்கு அனுப்பி வைக்கும் செலவுக்கு கூட விலை போதுமானதாக இல்லை என்பதால் மரங்களிலேயே காய்களை பறிக்காமல் விட்டுள்ளனர். இதனால் காய்கள் காய்ந்து வீணாகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

Next Story