கோவில்பட்டி அருகே டாஸ்மாக் கடையை கிராம மக்கள் முற்றுகை
கோவில்பட்டி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ளது முடுக்குமீண்டான்பட்டி கிராமம். இங்கிருந்து தோணுகால் செல்லும் சாலையில் மலையடிவாரத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் நேற்று முன்தினம் இரவு புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு மது விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றதாக தெரிகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த முடுக்குமீண்டான்பட்டி கிராம மக்கள், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் முருகன் தலைமையில், நேற்று மதியம் டாஸ்மாக் கடைக்கு திரண்டு சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் டாஸ்மாக் கடையை உடனே அகற்றவேண்டும் என்று கூறி கோஷங்கள் எழுப்பினர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், கழுகுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, மேற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். முற்றுகையில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள் டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும். அதுவரை நாங்கள் இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறினர். உடனே போலீசார் அந்த டாஸ்மாக் கடையில் இருந்த மதுபானங்களை ஒரு வாகனத்தில் ஏற்றினர். பின்னர் அந்த கடையை பூட்டினர். இதனை தொடர்ந்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story