பழனியில், ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
பழனியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.
பழனி,
பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இடும்பன் மலை அடிவாரத்தில் சுற்றுலா வாகனங்களை நிறுத்துவதற்கென பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு எவ்வித கட்டணமும் இன்றி பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே பழனி நகர் மற்றும் கோவிலை சுற்றியுள்ள சாலைகள், நடைபாதைகளை ஆக்கிரமித்து சிலர் கடைகள் வைத்துள்ளனர். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகிறது. அந்த வகையில் பழனி கோவில் சுற்றுலா பஸ்நிலையத்தில் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைத்திருந்ததால், பக்தர்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
நேற்று காலை கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன் மற்றும் கோவில் அதிகாரிகள் சுற்றுலா பஸ்நிலையத்தில் ஆக்கிரமித்து வைத்திருந்த கடைகளை அகற்றினர். தொடர்ந்து அங்கு தடுப்புகள் வைக்கப்பட்டது.
இதேபோல் பழனி நகராட்சி சார்பிலும் சன்னதி வீதி, அய்யம்புள்ளி ரோடு, அருள்ஜோதி வீதிஆகிய இடங்களில் சாலையை ஆக்கிரமித்தும், பாதைக்கு இடையூறாக கடையின் முன்பாக வைக்கப்பட்ட ஆக்கிரமிப்புகளை நகராட்சி அலுவலர்கள் அகற்றினர். மேலும் அங்கு ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story