திருச்சி குட்ஷெட்டில் இருந்து அதிக பாரத்துடன் சென்ற லாரி, கடைக்குள் புகுந்து கவிழ்ந்தது சாலையோரம் நின்ற என்ஜினீயர் பலி


திருச்சி குட்ஷெட்டில் இருந்து அதிக பாரத்துடன் சென்ற லாரி, கடைக்குள் புகுந்து கவிழ்ந்தது சாலையோரம் நின்ற என்ஜினீயர் பலி
x
தினத்தந்தி 2 Jun 2019 4:45 AM IST (Updated: 2 Jun 2019 1:05 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி குட்ஷெட்டில் இருந்து அதிக பாரத்துடன் சென்ற லாரி, சாலையோர கடைக்குள் புகுந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் உறவினருடன் பேசிக்கொண்டிருந்த என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார். பெண் போலீஸ் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருச்சி,

திருச்சி முதலியார் சத்திரம் ரெயில்வே குட்ஷெட்டிற்கு தஞ்சை மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் இருந்து நெல்மூட்டைகள் கடந்த 2 நாட்களாக சரக்கு ரெயில்களில் கொண்டு வரப்பட்டு, அவை திருச்சி உள்பட பல்வேறு இடங்களுக்கு லாரியில் கொண்டு செல்லப்படுகின்றன.

திருச்சி கே.கே.நகரில் உணவு தானிய சேமிப்பு கிடங்கு உள்ளது. நேற்று காலை குட்ஷெட்டில் இருந்து லாரிகளில் நெல் மூட்டைகள் ஏற்றப்பட்டு கே.கே.நகர் தானிய சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன. அதன்படி காலை 10 மணிக்கு திருச்சி-புதுக்கோட்டை சாலையில் சேதுராமன் பிள்ளை காலனியில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக பாரத்துடன் நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. அந்த சாலை ரெயில்வே மேம்பாலத்தில் இருந்து சற்று இறக்கமான பகுதி ஆகும்.

அந்த சாலையோரத்தில் சேதுராமன் பிள்ளை காலனியில் உள்ள ஆடிட்டர் அலுவலகம் ஒன்றில் வேலை பார்க்கும் புதுக்கோட்டையை சேர்ந்த முஸ்தபா மகன் அஜீத் ரஹ்மான் (வயது 22), அவருடைய உறவினர் முகமது ஆசிக் (25) மற்றும் ஒருவர் என 3 பேர் பேசிக்கொண்டு இருந்தனர். இதில் அஜீத் ரஹ்மான் என்ஜினீயர் ஆவார். மேலும் அவ்வழியாக திருச்சி மாநகர ஆயுதப்படையில் வேலை பார்க்கும் பெண் போலீஸ் (2-ம் நிலை காவலர்) மண்ணச்சநல்லூரை சேர்ந்த சரண்யா(30), பணிக்காக ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதிக வேகத்தில் வந்த நெல் மூட்டைகள் ஏற்றிய லாரி, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள விநாயகா ஏஜென்சி என்ற வாகன உதிரிபாகங்கள் கடைக்குள் புகுந்து நடுரோட்டில் நெல் மூட்டைகளுடன் கவிழ்ந்தது. இதில் சாலையோரம் பேசிக்கொண்டிருந்தவர்களில் 2 பேர் மற்றும் பெண் போலீஸ் சரண்யா ஆகியோர் லாரிக்கு அடியில் சிக்கிக்கொண்டனர். ஒருவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்ததால் தப்பினார்.

இந்த விபத்தில் அஜீத் ரஹ்மான் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர் முகமது ஆசிக் பலத்த காயமடைந்தார். பெண் போலீஸ் சரண்யா தலையில் பலத்த காயத்துடன், இடது கால் நசுங்கிய நிலையில் உயிருக்கு போராடினார். அவருடைய ஸ்கூட்டர் அப்பளம் போல் நொறுங்கி நசுங்கியது.

விபத்திற்கு காரணமான லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சாலையில் லாரி கவிழ்ந்து கிடந்ததால், உடனடியாக திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் 2 வண்டிகளில் அங்கு விரைந்து வந்தனர். மேலும் திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசாரும் விரைந்து வந்தனர். அங்கு 2 கிரேன்கள் வரவழைக்கப்பட்டு சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரியும், நெல் மூட்டைகளும் அப்புறப்படுத்தப்பட்டன. இடிபாடுகளுக்குள் சிக்கிய பெண் போலீஸ் சரண்யா மற்றும் முகமது ஆசிக் ஆகியோர் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் கவலைக்கிடமாக இருந்த பெண் போலீஸ் சரண்யா, மேல்சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டார். 

Next Story