ரம்ஜான் பண்டிகை, கோவில் திருவிழாக்கள் எதிரொலி, கல்வார்பட்டி சந்தையில் ஆடுகள் வாங்க குவிந்த வியாபாரிகள்
ரம்ஜான் பண்டிகை, கோவில் திருவிழாக்கள் எதிரொலியாக கல்வார்பட்டி ஆட்டுச்சந்தையில் வியாபாரிகள் குவிந்தனர்.
வேடசந்தூர்,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டியில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறும். இந்த சந்தைக்கு வேடசந்தூர், எரியோடு, சின்னராவுத்தன்பட்டி, காளனம்பட்டி, இடையகோட்டை, மார்க்கம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து விவசாயிகள் வெள்ளாடு, செம்மறி ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
ஆடுகளை வாங்குவதற்கு திண்டுக்கல், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் மற்றும் கறிக்கடைக்காரர்கள் கல்வார்பட்டி சந்தைக்கு வருகை புரிவார்கள். இந்த நிலையில் வைகாசி மாதத்தில் கிராம பகுதிகளில் அதிகளவு கோவில் திருவிழாக்கள் நடப்பது வழக்கம். மேலும் வருகிற 5-ந்தேதி ரம்ஜான் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.
இதனால் நேற்று வியாபாரிகள் குவிந்ததால் ஆட்டுச்சந்தை களை கட்டியது. வியாபாரிகள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கி சென்றனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று அதே அளவு கொண்ட ஆடு ரூ.7 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது. வழக்கமான விலையை விட இந்த வாரம் ஆடுகள் அதிக விலைக்கு விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த வாரச்சந்தையில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு 18 ஆண்டுகள் ஆகிறது. இதனால் சுற்றுச்சுவர் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் குடிநீர், கழிப்பறை வசதி இல்லாததால் வியாபாரிகள், விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே கல்வார்பட்டி ஆட்டுச்சந்தையில் போதுமான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Related Tags :
Next Story