வெற்றியை உறுதி செய்த நயினார்கோவில் பகுதி பொதுமக்களின் தேவையறிந்து செயல்படுவேன் - சதன் பிரபாகர் எம்.எல்.ஏ. பேட்டி


வெற்றியை உறுதி செய்த நயினார்கோவில் பகுதி பொதுமக்களின் தேவையறிந்து செயல்படுவேன் - சதன் பிரபாகர் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 2 Jun 2019 4:30 AM IST (Updated: 2 Jun 2019 1:15 AM IST)
t-max-icont-min-icon

பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் எனது வெற்றியை உறுதி செய்த நயினார்கோவில் பகுதி மக்களின் தேவையறிந்து செயல்படுவேன் என்று சதன் பிரபாகர் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

நயினார்கோவில்,

பரமக்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சதன் பிரபாகர் பரமக்குடி தாலுகா நயினார்கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வீதி வீதியாக சென்று தனக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார். முன்னதாக அவர் நயினார்கோவிலில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல நாகநாதசாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன்பின்னர் நயினார்கோவிலில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து அய்யனார் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது அவரிடம் கோவிலுக்கு சாலை வசதி, ஆழ்குழாய் அமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு அவர் உறுதியாக செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார். பின்னர் மறைந்த முன்னாள் எம்.பி. ரித்திஷ் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து சதன் பிரபாகர் எம்.எல்.ஏ. பேட்டியில் கூறும்போது, பரமக்குடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் எனது வெற்றியை உறுதி செய்த நயினார்கோவில் பகுதி மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நயினார்கோவில் பகுதி மக்களின் குறைகள், தேவை அறிந்து செயல்படுவேன். எனது வெற்றிக்கு பாடுபட்ட ஜே.கே.ரித்திசின் மறைவு ராமநாதபுரம் மாவட்டத்துக்கு மிகப்பெரிய இழப்பாகும் என்று தெரிவித்தார்.


Next Story