ராமநாதபுரத்தில் இருந்து சென்னை சென்றபோது ரெயிலில் படியில் பயணம் செய்த கொத்தனார் பலி


ராமநாதபுரத்தில் இருந்து சென்னை சென்றபோது ரெயிலில் படியில் பயணம் செய்த கொத்தனார் பலி
x
தினத்தந்தி 2 Jun 2019 4:45 AM IST (Updated: 2 Jun 2019 1:15 AM IST)
t-max-icont-min-icon

ரெயிலில் படியில் பயணம் செய்தபோது தவறி விழுந்து ராமநாதபுரம் கொத்தனார் பரிதாபமாக உயிரிழந்தார். ஏ.டி.எம். கார்டு மூலம் அவர் யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் வெளிப்பட்டிணம் சத்திரத்தெரு பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவரின் மகன் பாலமுருகன்(வயது24). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். திருமணமாகவில்லை. இந்நிலையில் இவர் சென்னையில் உள்ள அக்காவின் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ரெயிலில் சென்னை சென்றுள்ளார். விருத்தாச்சலம் அருகில் சென்றபோது படியில் அமர்ந்து சென்ற பாலமுருகன் தவறி கீழே விழுந்துள்ளார்.

இதனை கண்ட உடன் இருந்த பயணிகள் சிலர் அவர் கொண்டு வந்த பையை விருத்தாச்சலம் ரெயில்வே போலீசில் ஒப்படைத்தனர். அந்த பையை சோதனையிட்ட போலீசார் அதில் ரெயில் டிக்கெட் மற்றும் தனியார் வங்கி ஏ.டி.எம். கார்டு மட்டுமே இருந்துள்ளது. இதனால் விவரம் தெரியாமல் போலீசார் விருத்தாச்சலம் உள்ளிட்ட பகுதி ரெயில்வே தண்டவாள பகுதியில் தேடி உள்ளனர். ஆனால், பாலமுருகன் உடல் கிடைக்கவில்லை.

இதனால் போலீசார் வங்கியை தொடர்பு கொண்டு ஏ.டி.எம். கார்டை வைத்து முகவரி விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் ராமநாதபுரம் சத்திரத்தெருவில் உள்ள வள்ளித்தாய் என்பவரின் பெயரில் கணக்கு தொடங்கியது தெரிந்தது. பாலமுருகனின் தாய் பெயரில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளதை உறுதி செய்த ரெயில்வே போலீசார் ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரித்து பார்த்தபோது கடந்த 30–ந் தேதி ரெயிலில் சென்னை சென்ற மகனை காணவில்லை என்று வள்ளித்தாய் ராமநாதபுரம் நகர் போலீசில் புகார் செய்துள்ளது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் இங்குள்ள பாலமுருகனின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே ரெயில்வே போலீசாரின் தொடர் தேடுதல் வேட்டையில் விருத்தாச்சலத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பு முட்புதரில் பாலமுருகனின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடலை கைப்பற்றிய ரெயில்வே போலீசார் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து கதறி அழுத பாலமுருகனின் குடும்பத்தினர் விருத்தாச்சலம் விரைந்துள்ளனர். ரெயிலில் சென்ற வாலிபர் படியில் அமர்ந்து சென்றபோது தவறிவிழுந்து பலியானதும், ஏ.டி.எம். கார்டு மூலம் அடையாளம் கண்டுபிடித்து தகவல் தெரிவித்துள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story