சீரான கால இடைவெளியில் காவிரி கூட்டுக்குடிநீர் வழங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் - கலெக்டர் உத்தரவு
சீரான கால இடைவெளியில் காவிரி கூட்டுக்குடிநீர் வழங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
ராமநாதபுரம்,
கோடைகாலத்தில் தற்போதுள்ள வறட்சியான சூழ்நிலையில் பொதுமக்கள் சிரமப்படாத வகையில் சீரான குடிநீர் வினியோகிக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பேராவூர் கிராமத்தில் குடிநீர் வினியோகம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பேராவூர் கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வறட்சி நிதி திட்டம் 2018–19–ன் கீழ் ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் திறந்தவெளி கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இதன் பயன்பாடு குறித்து மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது பொதுமக்கள் சார்பில் இந்த திறந்தவெளி கிணறு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும், கிணற்றின் சுற்றுப்பகுதியில் மணல் சரிவாக இருப்பதால் பெண்கள் தண்ணீர் எடுக்க சிரமப்படுவதாகவும் கலெக்டரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து கிணற்றின் சுற்றுப்பகுதியில் 2 மீட்டர் அகலத்தில் தளம் அமைக்கவும், கிணற்றிற்கு வந்து செல்லும் பாதையினை சீரமைக்கவும் ஊராட்சித்துறை அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
அதனை தொடர்ந்து பேராவூர் கிராமப்பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் தொடர்பாக கிராம பொதுமக்களிடத்தில் கேட்டறிந்தார். மேலும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சீரான கால இடைவெளியில் காவிரி கூட்டுக்குடிநீர் வழங்குவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன் தொடர்ச்சியாக மண்டபம் யூனியன் பட்டணம்காத்தான் ஊராட்சியில் தமிழ்நாடு கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.55 லட்சம் மதிப்பில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிருந்தாவன் கார்டன் வரையில் அமைக்கப்பட்டு வரும் தார்சாலை பணிகளின் தரம் குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ஊராட்சிகள் உதவி இயக்குனர் கேசவதாசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டி, சந்திரமோகன், உதவி பொறியாளர்கள் ஹேமலதா, அருண், ராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.