‘டிக்டாக்’ செயலியில் வீடியோ வெளியிட்டதால் மனைவியை கொலை செய்தேன் - கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்


‘டிக்டாக்’ செயலியில் வீடியோ வெளியிட்டதால் மனைவியை கொலை செய்தேன் - கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 2 Jun 2019 5:15 AM IST (Updated: 2 Jun 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

‘டிக்டாக்’ செயலியில் வீடியோ வெளியிட்டதால் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ததாக அவரது கணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

போத்தனூர், 

கோவையை அடுத்த அறிவொளி நகரை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 38), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி நந்தினி (28). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தகராறு காரணமாக தம்பதியினர் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கடந்த சில மாதங்களாக நந்தினி செல்போனில் ‘டிக்டாக்’ செயலிக்கு அடிமையாகி அதை பயன்படுத்தி வீடியோ வெளியிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நந்தினி வேலை செய்யும் கல்லூரிக்கு மதுகுடித்து விட்டு போதையில் சென்ற கனகராஜ் அங்கு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் நந்தினியின் வயிறு , தலை ஆகிய இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த நந்தினி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கனகராஜை கைது செய்தனர்.

மனைவியை கொலை செய்தது குறித்து கனகராஜ் போலீசாரிடம் அளித்து உள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நானும் நந்தினியும் 2 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிரிந்து இருந்த சமயத்தில் நான் அவ்வப்போது எனது குழந்தைகளை பார்க்க செல்வேன். அப்போது அவர் என்னை அலட்சியம் செய்து வந்தார். மேலும் ‘டிக்டாக்’ செயலியில் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வந்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

இதனால் நான் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு எச்சரித்தேன். ஆனால் அவர் அதை கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து ‘டிக்டாக்’ செயலியில் வீடியோ பதிவேற்றம் செய்து வந்தார். நந்தினியை செல்போனில் தொடர்பு கொண்டு பேச முயற்சிக்கும் போது எல்லாம் அழைப்பு பிசியாகவே இருந்தது. இதுபற்றி கேட்டதற்கும் எந்த பதிலும் அவர் கூறவில்லை. குழந்தைகளின் நன்மைக்காக சேர்ந்து வாழலாம் என்று கூறியும் அவர் சட்டை செய்யவில்லை.

இதுகுறித்து நான் அவரிடம் பேசுவதற்கு செல்போனில் அழைத்தேன். அப்போது 30 நிமிடத்திற்கும் மேல் செல்போனில் வேறு நபருடன் நந்தினி பேசிக்கொண்டிருந்ததால் அழைப்பு பிசியாகவே இருந்தது. இதனால் சந்தேகமடைந்த நான் மது குடித்து விட்டு, நந்தினி வேலை செய்யும் கல்லூரிக்கு சென்றேன். அங்கு அவரை தனியாக அழைத்து செல்போன் உரையாடல் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். அப்போது ஆத்திரம் அடைந்த நான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நந்தினியை சரமாரியாக குத்தினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, மதுக்கரை போலீசார் கனகராஜை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். ‘டிக்டாக்’ செயலிக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது டிக்டாக்கில் வீடியோ பதிவேற்றம் செய்ததால் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story