ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தலையில் கல்லைப்போட்டு தந்தையை கொன்ற வாலிபர்


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தலையில் கல்லைப்போட்டு தந்தையை கொன்ற வாலிபர்
x
தினத்தந்தி 2 Jun 2019 4:30 AM IST (Updated: 2 Jun 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

வீட்டை தனது பெயருக்கு எழுதி தராததால் தூங்கும்போது தலையில் கல்லை தூக்கிப்போட்டு தந்தையை கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள எஸ்.அம்மாபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமராஜ் (வயது 58). விவசாயி. அவருடைய மனைவி ஆவுடையம்மாள். இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர்.

இவர்களுடைய மூத்த மகன் நாகராஜ் (30). டிப்ளமோ படித்துள்ள இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். சில தினங்களுக்கு முன்பு வேலையை விட்டுவிட்டு சொந்த ஊருக்கு வந்து வேலைக்கு ஏதும் செல்லாமல் இருந்துள்ளார். மேலும் அவர் ராமராஜ் குடியிருக்கும் வீட்டை தனது பெயருக்கு எழுதி தரும்படி தந்தையிடம் அடிக்கடி கேட்டு தகராறு செய்துவந்ததாக கூறப்படுகிறது.

3 மகன்கள் இருக்கும் நிலையில் ஒருவருக்கு மட்டும் வீட்டை எழுதித்தர ராமராஜ் முன்வரவில்லை. இதனால் அவர்களுக்குள் பிரச்சினை இருந்து வந்தது. இதற்கிடையே ஆவுடையம்மாள் தனக்கு உடல் நலம் சரியில்லை என்று கூறி கடந்த 30–ந்தேதி வத்திராயிருப்பில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு சென்றுள்ளார். மற்ற மகன்களும் வெளியே சென்று விட்ட நிலையில் வீட்டில் ராமராஜும், மகன் நாகராஜும் இருந்துள்ளனர்.

தனியாக இருந்த நிலையில் மீண்டும் வீட்டை தனது பெயருக்கு எழுதித்தருமாறு நாகராஜ் கேட்டுள்ளார். ஆனால் தரமுடியாது என்று ராமராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தந்தை மீது ஆத்திரத்தில் இருந்த நாகராஜ் அதிகாலையில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த ராமராஜின் தலையில் கல்லை தூக்கிப்போட்டுள்ளார். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

தந்தையை பெற்ற மகனே கொலை செய்தது குறித்து நத்தம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து நாகராஜை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story