வக்கீலுக்கு கொலை மிரட்டல் விடுத்த போலீஸ்காரர் பணி இடைநீக்கம்


வக்கீலுக்கு கொலை மிரட்டல் விடுத்த போலீஸ்காரர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 2 Jun 2019 3:45 AM IST (Updated: 2 Jun 2019 2:16 AM IST)
t-max-icont-min-icon

ராசிபுரத்தில் வக்கீலுக்கு கொலை மிரட்டல் விடுத்த போலீஸ்காரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

ராசிபுரம், 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் போலீஸ் நிலையம் முன்பு ஜெராக்ஸ் கடை வைத்திருக்கும் கோபால் என்பவரிடம் ராசிபுரம் போக்குவரத்து பிரிவில் வேலை பார்த்து வந்த போலீஸ்காரர் சதீஸ்குமார் மற்றும் 4 பேர் தகராறு செய்துள்ளனர். இதுபற்றி கோபால் ராசிபுரம் பழைய பஸ் நிலையத்தில் உள்ள வக்கீல் நல்வினை விஸ்வராஜிடம் சென்று, போலீஸ்காரரும் அவருடன் வந்தவர்களும் குடிபோதையில் சண்டைக்கு வந்ததாக கூறினார்.

அப்போது அங்கு வந்த போலீஸ்காரர் சதீஸ்குமார் மற்றும் அவருடன் வந்திருந்தவர்கள் வக்கீல் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டி அலுவலக அலமாரி கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர். மேலும் வக்கீலுக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர்.

இதுபற்றி வக்கீல் நல்வினை விஸ்வராஜ் ராசிபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ராசிபுரம் போலீசார், அவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு உள்பட 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விவேக், சுரே‌‌ஷ், ராஜா, ரமே‌‌ஷ் ஆகிய 4 பேரை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில் போக்குவரத்து போலீஸ்காரர் சதீஸ்குமார் தலைமறைவானார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் சதீஸ்குமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, போலீஸ்காரர் சதீஸ்குமாரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Next Story