போத்தனூர் பகுதியில், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த 8 பேர் கைது


போத்தனூர் பகுதியில், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த 8 பேர் கைது
x
தினத்தந்தி 2 Jun 2019 3:45 AM IST (Updated: 2 Jun 2019 2:18 AM IST)
t-max-icont-min-icon

கோவை போத்தனூர் பகுதியில் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த 8 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:-

கோவை,

கோவையை அடுத்த போத்தனூர் பகுதியில் குற்றங்களை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு போலீஸ் கமிஷனர் சுமித்சரண், போலீஸ் துணை கமிஷனர் பாலாஜி சரவணன் ஆகியோர் உத்தரவிட்டனர்.

இதைத்தொடர்ந்து தெற்கு பகுதி உதவி கமிஷனர் செட்ரிக் இமானுவேல், இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டனர்.

அவர்கள், குற்றத்தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கோவை போத்தனூர் நூராபாத்தை சேர்ந்த சிக்கந்தர் பாஷா (வயது28), நிஜாமுதீன்(27), செய்யது ரபீக்(30), போத்தனூர் பாரதி நகரை சேர்ந்த ஷாருக்கான் (23), ராமானுஜம் வீதியை சேர்ந்த பிரசாந்த்(23), அகமது சபீர்(27), சம்சுதீன்(21), குருசாமி வீதியை சேர்ந்த கவுரி சங்கர்(20) ஆகிய 8 பேரை மடக்கி பிடித்தனர்.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் 8 பேர் மீதும் ஏற்கனவே அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிய வந்தது. தற்போது இவர்கள் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது குறித்து போலீஸ் துணை கமிஷனர் பாலாஜி சரவணன் கூறியதாவது:-

கோவையில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் பெயர் பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்களிடம் இனி குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டோம் என்று எழுதி வாங்கப்பட்டுள்ளது. அதை மீறி மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டால் கைது செய்யப்படுவார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு புலியகுளத்தை சேர்ந்த ஆவி வினோத் என்பவருக்கு 10 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ரவுடிகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story