மேட்டுப்பாளையம், கோத்தகிரி மார்க்கெட்டில், பீன்ஸ் கொள்முதல் விலை உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி


மேட்டுப்பாளையம், கோத்தகிரி மார்க்கெட்டில், பீன்ஸ் கொள்முதல் விலை உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 2 Jun 2019 4:15 AM IST (Updated: 2 Jun 2019 2:18 AM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையம், கோத்தகிரி மார்க்கெட்டில் பீன்ஸ் கொள்முதல் விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை விவசாயமே பிரதானமாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், நூல்கோல், மேரக்காய், பீன்ஸ் உள்ளிட்ட மலைக்காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் சுகுனி, ஐஸ்பெர்க், சல்லாரை, புரூக்கோலி போன்ற ஏற்றுமதி தரம் வாய்ந்த இங்கிலி‌‌ஷ் காய்கறிகளையும் விவசாயிகள் பயிரிடுகின்றனர். விதைகள், இடுபொருட்கள் மற்றும் உரங்கள் விலையேற்றம், தொழிலாளர் பற்றாக்குறை, வனவிலங்குகளின் அட்டகாசம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வங்கிக்கடன் பெற்று விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.

தற்போது மலைக்காய்கறிகளின் கொள்முதல் விலை மார்க்கெட்டுகளில் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதையொட்டி பெரும்பாலான விவசாயிகள் தங்களது தோட்டங்களில் மலைக்காய்கறிகளை பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கோத்தகிரி பகுதியில் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் உருளைகிழங்கு, முட்டைக்கோஸ், கேரட், மற்றும் பீன்ஸ் ஆகியவற்றை அதிகமாக பயிரிட்டு வருகின்றனர். இதில் ரிலையன்ஸ் பீன்ஸ் மற்றும் பு‌‌ஷ் பீன்ஸ்களுக்கு கடந்த சில வாரங்களாக மார்க்கெட்டுகளில் கொள்முதல் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது.

நீலகிரியில் விளையும் பீன்ஸ் மிகுந்த சுவை மிகுந்ததாக இருப்பதால் ஆண்டு முழுவதும் சந்தையில் வரவேற்பு இருந்து வருகிறது. கடந்த வாரத்தில் பு‌‌ஷ் பீன்ஸ் கிலோ ஒன்றுக்கு 110 ரூபாய் வரை கோத்தகிரி மார்க்கெட்டில் கொள்முதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுகளில் பீன்ஸ் கிலோவுக்கு 60 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை தரத்திற்கு தக்கவாறு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. எனவே பீன்ஸ் பயிரிட்டுள்ள விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் பீன்ஸ் அறுவடை செய்ய தொடங்கி உள்ளனர். இதுகுறித்து நெடுகுளாவை சேர்ந்த விவசாயி ராமலிங்கம் கூறியதாவது:-

தோட்டங்களில் நிலத்தை பதப்படுத்தி நல்ல தரமான பீன்ஸ் விதைகளை பயிரிட்டு பராமரித்து வந்தால் சுமார் 70 நாட்களில் பீன்ஸ் அறுவடைக்கு தயாராகி விடும். 70 நாட்களில் இருந்து 100 நாட்களுக்குள் மூன்று தவணையாக அறுவடை செய்யலாம். இந்த பீன்ஸ் நீர்ச்சத்து மிகுந்ததாக இருப்பதால் கிட்னி சம்பந்தமான பிரச்சினைகளுக்கு மருந்து தயாரிப்பதற்காக அதிக அளவில் வாங்கி செல்கின்றனர். பெரும்பாலும் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் இருந்து பீன்ஸ் அண்டை மாநிலமான கேரளா மாநிலத்திற்கு அதிக அளவில் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. தற்போது பீன்ஸ் கொள்முதல் விலை கணிசமாக உயர்ந்து உள்ளதால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

எனினும் மற்ற காய்கறிகளுக்கு உரிய கொள்முதல் கிடைக்கவில்லை. இதனால் அவைகளை பாதுகாத்து வைக்க கோத்தகிரி பகுதியில் குளிர் பதன கிடங்கு இல்லை. எனவே மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் குளிர்சாதன கிடங்குகளில் அதிக கட்டணம் செலுத்தி காய்கறிகளை கோத்தகிரியில் இருந்து கொண்டு சென்று, வைத்து பாதுகாக்க வேண்டி உள்ளது. எனவே கோத்தகிரி மற்றும் கஸ்தூரிபாய் நகர் பகுதிகளில் வேளாண் வணிகத்துறை சார்பில் பலகோடி ரூபாய் செலவில் புதியதாக கட்டப்பட்டு இதுவரை திறக்காமல் இருக்கும் காய்கறி ஏல மையம், காய்கறிகளை வைக்கும் குளிர்பதன கிடங்கு, காய்கறி கழுவும் எந்திரம், மற்றும் தரம் பிரிக்கும் கட்டிடம் ஆகியவற்றை விவசாயிகளின் நலன்கருதி உடனடியாக திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story