கோடை விழா நிறைவு, ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி
ஊட்டியில் கோடை விழா நிறைவு பெற்றது. முன்னதாக சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி நடத்தப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கோடை விழா கடந்த மாதம் 1-ந் தேதி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கலைநிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து பூங்காவில் மலர் கண்காட்சி, புகைப்பட கண்காட்சி, நைட் பஜார், கலாசார நிகழ்ச்சிகள், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சிகள் மற்றும் பல்வேறு வண்ணங்களில் பூத்துக்குலுங்கிய மலர்களை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
கோடை விழாவையொட்டி ஆண்டுதோறும் ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், கடந்த மே மாதம் படகு போட்டி நடத்த இயலவில்லை. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து, நீலகிரி மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் கோடை விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி ஊட்டி படகு இல்லத்தில் நேற்று நடந்தது.
போட்டியில் கலந்துகொள்ள வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தங்களது பெயர்களை பதிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் பாதுகாப்பு கவசங்களை(லைப் ஜாக்கெட்) அணிந்து மிதி படகுகளில் ஏரியின் கரையோரத்துக்கு சென்றனர். படகு போட்டியை நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கொடியசைத்து தொடங்கி வைத்தார். கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி., சாந்தி ராமு எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் என 3 பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டு மிதி படகுகளில் சென்றனர். அவர்களது உறவினர்கள் அதனை செல்போனில் புகைப்படம் எடுத்தனர். போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஊட்டியை சேர்ந்த பிரிட்டோ மற்றும் ராஜ் முதல் இடம், சென்னையை சேர்ந்த விஜயகுமார் மற்றும் சக்தி 2-ம் இடம், சுந்தர் மற்றும் தமிழ்செல்வன் 3-ம் இடத்தை பிடித்தனர்.
கலப்பு இரட்டையர் பிரிவில் ஊட்டியை சேர்ந்த கார்த்திக் மற்றும் அர்ச்சனா முதலிடம், கள்ளக்குறிச்சியை சேர்ந்த சக்திவேல் மற்றும் மகாலட்சுமி 2-வது இடம், சென்னையை சேர்ந்த லட்சுமணன் மற்றும் ரேஷ்மா 3-வது இடத்தை கைப்பற்றினர். மேலும் படகு இல்ல ஊழியர்களுக்கு துடுப்பு படகு போட்டி நடந்தது. சுமார் 150 மீட்டர் தூரம் உள்ள இலக்கை நோக்கி மிதி படகில் கடந்து சென்றவர்களை காட்சி மேடை மற்றும் படகு இல்லத்தில் இருந்து சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்ததோடு, போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர். ஊட்டியில் படகு போட்டியுடன் கோடை விழா நிறைவடைந்தது. நேற்று ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இதில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா, தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் சிவசுப்ரமணியம், சுற்றுலா அலுவலர் சிவக்குமார், உதவி சுற்றுலா அலுவலர் துர்காதேவி, படகு இல்ல மேலாளர் ஜேக்சன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முடிவில் கோடை விழாவை சிறப்பாக நடத்திய அரசுத்துறை அலுவலர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story