ஊரக பகுதிகளில் தொலை மருத்துவ திட்டம்; அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்


ஊரக பகுதிகளில் தொலை மருத்துவ திட்டம்; அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
x
தினத்தந்தி 2 Jun 2019 4:30 AM IST (Updated: 2 Jun 2019 2:22 AM IST)
t-max-icont-min-icon

ஊரக பகுதிகளுக்கு தொலை மருத்துவ திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் ஊரக பகுதிகள் மற்றும் மருத்துவ வசதி கிடைக்க சிரமம் உள்ள பகுதிகளில் இலவச மருத்துவ சேவைகள் பெற சுகாதாரத்துறையில் முன்னோடி திட்டமான ஜி கேர் டயாபட்டிக் கவுன்சிலுடன் இணைந்து தொலை மருத்துவ திட்டம் தொடங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை மக்கள் வாழும் பகுதிகளில் துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய சுகாதார நிலையங்களில் செயல்படும் மையங்கள் மூலம் தொலை மருத்துவ சாதனம் பயன்படுத்தப்படும்.

இந்த மையங்களில் முதல்நிலை மருத்துவ சேவைகள் தகுதிவாய்ந்த மருத்துவ பணியாளர்கள் மூலம் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இலவசமாக வழங்கப்படும். இந்த மையங்களில் உயரம், எடை, இ.சி.ஜி., ரத்த அழுத்தம், கண், காது, தோல் பரிசோதனை, சர்க்கரை நோய், ரத்தம், கொழுப்பு அளவு ஆகியன பரிசோதிக்கப்படும். அதன்படி சிறப்பு மருத்துவர்களிடம் தொலை மருத்துவ ஆலோசனை பெறப்படும்.

இந்த மையங்களில் சிகிச்சை பெறுபவர்கள் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் காணொளி மூலம் தொடர்புகொண்டு அவர்களது நோய் உபாதை பற்றிய விவரங்களை கூறி மருத்துவ ஆலோசனை பெற்று அதற்குரிய மருந்து மாத்திரைகளை இலவசமாக பெறலாம்.

இந்த திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ராமன், ஜி கேர் டயாபட்டிக் கவுன்சில் தலைவர் டாக்டர் நந்தகோபால் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

அதை தொடர்ந்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிருபர்களிடம் கூறியதாவது:–

இந்த திட்டம் புதுவை மாநிலத்தில் 121 மையங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. வருகிற 15–ந்தேதிக்குள் ஏனாமிலும், ஜூலை 30–க்குள் புதுவை மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டம் அமலுக்கு வரும்போது அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை குறையும். நெருக்கடிகள் குறைவதால் அங்குள்ள நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை கிடைக்கும்.

தற்போது புதுவையில் 81 டாக்டர்களை ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் ஒப்பந்த முறையில் பணியமர்த்த மத்திய சுகாதாரத்துறையிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக நர்சுகளை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.


Next Story