கால அவகாசம் கொடுக்காமல் அறிவிக்கப்பட்டுள்ள சபாநாயகர் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்; கவர்னருக்கு, எதிர்க்கட்சிகள் கோரிக்கை


கால அவகாசம் கொடுக்காமல் அறிவிக்கப்பட்டுள்ள சபாநாயகர் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்; கவர்னருக்கு, எதிர்க்கட்சிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 2 Jun 2019 4:45 AM IST (Updated: 2 Jun 2019 2:22 AM IST)
t-max-icont-min-icon

காலஅவகாசம் அளிக்காமல் அறிவித்த சபாநாயகர் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கவர்னருக்கு எதிர்க்கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க.வினர் கோரிக்கை விடுத்துள்ளது.

புதுச்சேரி,

புதிய சபாநாயகரை தேர்வு செய்ய வசதியாக புதுவை சட்டசபை நாளை(திங்கட்கிழமை) கூடுகிறது. இதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர் பிறப்பித்துள்ளார். நியமன சீட்டுகளை அளிப்பதற்கான அறிவிப்பு ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களுக்கும் தனித்தனியாக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் சபாநாயகர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் 12 மணி வரை சட்டசபை செயலாளரிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்று மாலை எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் காமராஜர் சாலையில் உள்ள அண்ணாமலை ஓட்டலில் நடந்தது. கூட்டத்திற்கு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவருமான ரங்கசாமி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் என்.எஸ்.ஜெ. ஜெயபால், வையாபுரி மணிகண்டன், சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன், பா.ஜ.க. துணைத்தலைவர் ஏம்பலம் செல்வம் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், கால அவகாசம் கொடுக்காமல் அறிவிக்கப்பட்டுள்ள சபாநாயகர் தேர்தலை ரத்து செய்யவேண்டும். இது தொடர்பாக கவர்னர், மத்திய உள்துறை மந்திரி ஆகியோருக்கு புகார் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி தவிர மற்ற அனைவரும் அங்கிருந்து புறப்பட்டு கவர்னர் மாளிகைக்கு சென்றனர். அங்கு கவர்னர் கிரண்பெடி இல்லை. கவர்னரின் சிறப்பு அதிகாரி தேவநீதிதாசை சந்தித்து நாளை (திங்கட்கிழமை) நடைபெறுவதாக அறிவித்துள்ள சபாநாயகர் தேர்தலை ரத்து செய்யக்கோரி மனு அளித்தனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சட்டசபை வளாகத்திற்கு சென்றனர். அங்கு சட்டசபை செயலாளர் வின்சென்ட் ராயரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இது தொடர்பாக அவர்கள் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:–

புதுவை சட்டசபைக்கு சபாநாயகர் தேர்தல் நாளை மறுநாள் (அதாவது நாளை திங்கட்கிழமை) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நியமன சீட்டுகளை அளிப்பதற்கான அறிவிப்பு ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களுக்கும் தனித்தனியாக அனுப்பி இருப்பதாக கூறியுள்ளனர். ஆனால் எங்களுக்கு இன்னும் வந்து சேரவில்லை. சபாநாயகர் தேர்தல் அறிவிக்க வேண்டும் என்றால் சட்டசபை நியமன விதிகளின் பிடி 14 நாட்களுக்கு முன்னதாக அறிவிக்க வேண்டும். வேட்புமனு தாக்கல் முடிந்த பின்னர் சபாநாயகர் தேர்தலுக்கு இடையே 48 மணி நேரம் இருக்க வேண்டும்.

ஆனால் அவ்வாறு இல்லாமல் உடனடியாக தேர்தல் நடத்தியுள்ளனர். இவ்வளவு அவசர அவசரமாக இந்த தேர்தலை நடத்த வேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியினரிடையே தற்போது பெரிய அளவில் உட்கட்சி பூசல் உள்ளது. எனவே அதனை மறைக்கவே இந்த தேர்தலை அவசரமாக நடத்துகின்றனர்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சபாநாயகர் தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அறிவித்து அதற்கான காலஅவகாசம் கொடுத்து சபாநாயகர் தேர்தலை நடத்த வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். தற்போது அவர் டெல்லியில் உள்ளார். எனவே கவர்னரின் சிறப்பு அதிகாரியிடம் மனுவை கொடுத்து அவர் மூலமாக கவர்னருக்கு அனுப்பி வைத்துள்ளோம். மேலும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு போன் மூலம் புகார் தெரிவித்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story