புதிய சபாநாயகரை தேர்வு செய்ய புதுச்சேரி சட்டசபை நாளை கூடுகிறது


புதிய சபாநாயகரை தேர்வு செய்ய புதுச்சேரி சட்டசபை நாளை கூடுகிறது
x
தினத்தந்தி 2 Jun 2019 5:00 AM IST (Updated: 2 Jun 2019 2:22 AM IST)
t-max-icont-min-icon

புதிய சபாநாயகரை தேர்வு செய்ய புதுச்சேரி சட்டசபை நாளை கூடுகிறது.

புதுச்சேரி,

புதுவை சபாநாயகராக பதவி வகித்த வைத்திலிங்கம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டதால் பதவியை ராஜினாமா செய்தார். தேர்தலில் போட்டியிட்ட அவர் வெற்றியும் பெற்றார்.

இந்தநிலையில் புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் நடைபெற உள்ளது. எனவே புதிய சபாநாயகரை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

புதிய சபாநாயகரை தேர்வு செய்ய வசதியாக புதுவை சட்டசபை நாளை (திங்கட்கிழமை) கூடுகிறது. இதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை சட்டசபை செயலாளர் வின்சென்ட்ராயர் பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை சட்டப்பேரவை 3-ந்தேதி (நாளை) காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை மண்டபத்தில் கூட்டப்படுகிறது. அதே நாளை பேரவை தலைவர் (சபாநாயகர்) தேர்தல் நடத்தும் தேதியாக கவர்னர் நிர்ணயித்துள்ளார். நியமன சீட்டுகளை அளிப்பதற்கான அறிவிப்பு ஒவ்வொரு உறுப்பினருக்கும் தனித்தனியாக அனுப்பப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

புதுவை சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 15 எம்.எல்.ஏ.க்கள் (வைத்திலிங்கம் இதுவரை எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவில்லை) உள்ளனர். கூட்டணி கட்சியான தி.மு.க.வுக்கு 3 எம்.எல்.ஏ.க்களும், சுயேச்சை எம்.எல்.ஏ. ஒருவரின் ஆதரவு என 19 பேர் உள்ளனர்.

எதிர்க்கட்சியில் என்.ஆர்.காங்கிரஸ் 7, அ.தி.மு.க. 4, நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 என 14 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எனவே எதிர்க்கட்சியினர் சபாநாயகர் தேர்தலில் போட்டியிட முன்வந்தாலும் ஆளுங்கட்சி எளிதாக வெற்றிபெற வாய்ப்பு உள்ளது.

ஆளுங்கட்சி தரப்பில் தற்போது துணை சபாநாயகராக உள்ள சிவக்கொழுந்து, முதல்-அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன், அரசு கொறடா அனந்தராமன், எம்.என்.ஆர்.பாலன் ஆகியோர் சபாநாயகர் பதவிக்கு போட்டியிட முயற்சி செய்து வருகின்றனர். சபாநாயகர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் 12 மணி வரை சட்டசபை செயலாளரிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

சபாநாயகர் பதவிக்கு போட்டி இருக்குமா? இல்லையா? என்பது குறித்து இன்று பிற்பகலுக்குள் தெரிந்துவிடும். எதிர்க்கட்சி தரப்பில் போட்டி இருந்தால் நாளை கூடும் சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறும்.

இல்லாவிட்டால் ஆளுங்கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்பவர் சட்டமன்ற கூட்டத்தில் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொள்வார்.

Next Story