ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த மாணவியின் ஓராண்டு கல்வி கட்டணத்தை ஏற்ற கலெக்டர்


ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த மாணவியின் ஓராண்டு கல்வி கட்டணத்தை ஏற்ற கலெக்டர்
x
தினத்தந்தி 2 Jun 2019 4:30 AM IST (Updated: 2 Jun 2019 2:24 AM IST)
t-max-icont-min-icon

ஏழ்மை குடும்பத்தை சேர்ந்த மாணவியின் ஓராண்டு கல்வி கட்டணத்தை மாவட்ட கலெக்டர் அன்பழகன் ஏற்றார்.

கரூர்,

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகள் அனுசியா. ஏழ்மை குடும்பத்தை சேர்ந்தவர். இவர் தாந்தோணி அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை இயற்பியல் படிக்க விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் கல்லூரிக்கான கல்வி கட்டணத்தை கட்ட இயலாத அவரது குடும்ப சூழ்நிலை கல்லூரியில் சேரும் அவரின் கனவுக்கு இடையூறாக இருந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் மூலமாக மாவட்ட கலெக்டர் அன்பழகனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் அந்த மாணவி கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

கல்வி கட்டணத்தை ஏற்ற கலெக்டர்

இதையடுத்து மாவட்ட கலெக்டர் அன்பழகன், மாணவி அனுசியாவின் இளங்கலை முதலாமாண்டு பயிலத்தேவையான கட்டணத்தை தனது சொந்த செலவில் இருந்து செலுத்துவதாக கூறி அதற்கான தொகையினையும் வழங்கினார்.

இந்நிலையில் கலெக்டர் உதவி செய்ததை அறிந்த தாந்தோணி அரசு கலைக்கல்லூரி துணை முதல்வரும், கணினி அறிவியல் பிரிவின் துறைத்தலைவருமான தங்கதுரை, மாணவியின் மீதமுள்ள இரண்டு வருடத்திற்கான கட்டணத்தொகையை தாமே செலுத்திவிடுவதாக தெரிவித்துள்ளார்.

வாழ்த்து

இதையடுத்து கலெக்டர் அந்த மாணவியிடம் “தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் குறிப்பாக நேர்மையுடனும் வாழ்க்கையை எதிர்கொண்டு, கல்வியில் சிறந்து விளங்கி எதிர்காலத்தில் இந்தச்சமுதாயத்திற்கு சேவையாற்றும் நல்ல மனிதராக நீங்கள் உருவாக வேண்டும்” என்று கூறி வாழ்த்தினார். அப்போது மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் கவிதா உடனிருந்தார். 

Next Story