ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்யும் பா.ஜனதாவுக்கு பதிலடி கொடுக்க காங்கிரஸ் முடிவு 4 எம்.எல்.ஏ.க்களை இழுக்க சித்தராமையா பேச்சுவார்த்தை


ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்யும் பா.ஜனதாவுக்கு பதிலடி கொடுக்க காங்கிரஸ் முடிவு 4 எம்.எல்.ஏ.க்களை இழுக்க சித்தராமையா பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 2 Jun 2019 4:00 AM IST (Updated: 2 Jun 2019 2:46 AM IST)
t-max-icont-min-icon

கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்யும் பா.ஜனதாவுக்கு பதிலடி கொடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

பெங்களூரு, 

கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்யும் பா.ஜனதாவுக்கு பதிலடி கொடுக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. பா.ஜனதாவை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்களை இழுக்க கூட்டணி ஒருங்கிணைப்பு குழு தலைவரான சித்தராமையா பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டணி ஆட்சி

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மூத்த தலைவர் குமாரசாமி இருந்து வருகிறார். துணை முதல்-மந்திரியாக காங்கிரசை சேர்ந்த பரமேஸ்வர் உள்ளார்.

இந்த நிலையில் மந்திரி பதவி கிடைக்காததால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். அவர்களை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சி அமைக்க அவ்வப்போது பா.ஜனதா முயற்சி செய்து வந்தது. ஆனால் இதுவரை அந்த முயற்சி கைகூடவில்லை. மேலும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகள் படுதோல்வி அடைந்துள்ளன. இதனால் கூட்டணி கட்சி தலைவர்கள் இடையே விரிசல் ஏற்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஆட்சி அமைக்க முயற்சி

அதே வேளையில் நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளில் 25 தொகுதிகளில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனால் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க ஆபரேஷன் தாமரையை பா.ஜனதாவினர் கையில் எடுக்கலாம் என்று காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) தலைவர்கள் கருதுகின்றனர். கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று பா.ஜனதா மேலிடம் கூறி இருப்பதாக எடியூரப்பா கூறியுள்ளார்.

ஆனாலும் ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை எந்த நேரத்திலும் இழுத்து ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் பா.ஜனதா தலைவர்கள் ஈடுபடலாம் என்று கூட்டணி தலைவர்கள் நினைக்கின்றனர். இதனால் ஆபரேஷன் தாமரையை முறியடிக்கவும், கூட்டணி ஆட்சியை தக்க வைத்து கொள்ளவும் முதல்-மந்திரி குமாரசாமி, முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா மறைமுகமாக காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பா.ஜனதாவுக்கு பதிலடி

அதாவது கூட்டணி ஆட்சியை தக்க வைத்து கொள்ள காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்க கூட்டணி தலைவர்கள் முன்வந்துள்ளனர். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் முதல்-மந்திரி குமாரசாமி ஈடுபட்டுள்ளார்.

குறிப்பாக ரமேஷ் ஜார்கிகோளிக்கு மந்திரி பதவி வழங்க குமாரசாமி ஆர்வம் காட்டி வருகிறார். இதுஒரு புறம் இருக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்க பா.ஜனதா தலைவர்கள் முயற்சி செய்தால், பதிலுக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் சித்த ராமையா ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

4 எம்.எல்.ஏ.க்கள்

அதன்படி, முதற்கட்டமாக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 4 பேரை இழுக்க சித்தராமையா முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களான பசவராஜ் தடேசகோரு, ராஜுகவுடா, சோமலிங்கப்பா, சிவராஜ் பட்டீல் ஆகிய 4 பேருடன் முதற்கட்டமாக சித்தராமையா பேச்சு வார்த்தை நடத்தி இருப்பதாகவும், ஆபரேஷன் தாமரையை பா.ஜனதா கையில் எடுத்தால், 4 எம்.எல்.ஏ.க்களுடன் அடுத்தக்கட்ட பேச்சு வார்த்தை நடத்த சித்தராமையா திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் கர்நாடக அரசியல் களம் பரபரப்பாகவே காணப்படுகிறது.

Next Story