சேலத்தில், குடும்பத்தகராறு காரணமாக போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சி
சேலத்தில் குடும்பத்தகராறு காரணமாக போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டார். அவருக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலம்,
சேலம் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் பழனிவேல் (வயது 44). இவர் அன்னதானப்பட்டியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சுகுணா. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. மேலும் பழனிவேலின் ஏ.டி.எம். கார்டு அவருடைய மனைவியிடம் இருப்பதாக தெரிகிறது.
நேற்று அவர் தனது தந்தைக்கு பணம் கொடுப்பதற்காக சம்பளத்தில் இருந்து, ரூ.2 ஆயிரம் எடுத்து தருமாறு அவருடைய மனைவியிடம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவருடைய மனைவி பணம் தரமுடியாது என கூறியதாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பழனிவேல் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
இந்தநிலையில் நேற்று அதிகாலையில் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு பழனிவேல் போன் செய்துள்ளார். அப்போது அவர், தான் விஷ இலையை சாப்பிட்டு விட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், கலெக்டர் பங்களா பின்புறம் உள்ள ஆத்துக்காட்டில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரோந்து பணியில் இருந்த போலீசார் மற்றும் போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்தவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு சென்று அவர்கள் பார்த்தபோது பழனிவேல் மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து அவர்கள் பழனிவேலை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது தொடர்பாக அஸ்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதில், மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக விஷம் குடித்திருப்பது தெரியவந்தது.
மேலும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பழனிவேல், அவருடைய மனைவி சுகுணா இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தகராறு முற்றவே பழனிவேல் மீது அவருடைய மனைவி மண்எண்ணெய் ஊற்றி தீ வைக்க முயன்றதாக தெரிகிறது. இதையடுத்து அவர் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம், பக்கத்தில் இருப்பவர்கள் அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் போலீசார் விசாரணை நடத்திவிட்டு பழனிவேலின் மனைவிக்கு அறிவுரை கூறிவிட்டு சென்றனர். தொடர்ந்து கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வரவே, பழனிவேல் தற்கொலை முயற்சி மேற்கொண்டது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story