அரக்கோணம் ரெயில்பாதை உயர்அழுத்த மின்கம்பியில் கோளாறு 2 ரெயில்கள் தாமதம்
அரக்கோணம் அருகே நேற்று காற்றுடன் பெய்த பலத்த மழையால் தண்டவாளத்தின் மீது உயர்அழுத்த மின்கம்பியில் கோளாறு ஏற்பட்டது. இதனால் 2 ரெயில்கள் தாமதமாக சென்றன.
அரக்கோணம்,
அரக்கோணம் பகுதியில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. சுழன்றடித்த சூறாவளியால் குப்பைகள் பறந்தன. விளம்பர பதாகைகளும் சாய்ந்தன. பலத்த காற்றுடன் கூடிய மழையால் திருத்தணி - அரக்கோணம் ரெயில் பாதையில் இச்சிப்புத்தூர் ரெயில் நிலையம் அருகில் ரெயில்பாதையில் உயர்அழுத்த மின் கம்பியில் கோளாறு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் அரக்கோணத்தில் இருந்து பழுது பார்க்கும் ரெயிலில் ஊழியர்கள் சென்று, மின்கம்பியில் ஏற்பட்ட கோளாறை சரி செய்தனர்.
இதன் காரணமாக திருத்தணி - சென்னை நோக்கி செல்லும் 2 மின்சார ரெயில்கள் சுமார் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. சென்னையிலிருந்து திருத்தணி நோக்கி செல்லும் மின்சார ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. பின்னர் அந்த ரெயில் திருத்தணிக்கு செல்லாமல் மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு சென்றது. இதனால் ரெயில் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
மழையின்போது வீசிய காற்றினால் கீழாந்தூரை சேர்ந்த ஏழுமலை (வயது 40) என்பவருக்கு சொந்தமான வீட்டின் மேற்கூரை தகடு காற்றில் தூக்கி வீசப்பட்டது. தகவல் அறிந்ததும் தாசில்தார் ஜெயக்குமார் மற்றும் வருவாய்துறை ஊழியர்கள் பாதிக்கப்பட்ட ஏழுமலையின் வீட்டிற்கு சென்று, அவருக்கு அரிசி, வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
Related Tags :
Next Story