காங்கிரசுடன் தேசியவாத காங்கிரஸ் இணையுமா? சரத்பவார் பதில்
காங்கிரசுடன் தேசியவாத காங்கிரஸ் இணையுமா? என்ற கேள்விக்கு சரத்பவார் பதிலளித்தார்.
மும்பை,
காங்கிரசுடன் தேசியவாத காங்கிரஸ் இணையுமா? என்ற கேள்விக்கு சரத்பவார் பதிலளித்தார்.
ராகுல்காந்தி சந்திப்பு
நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர்களை கூட சந்திக்க மறுத்து மவுனம் காத்து வந்த ராகுல்காந்தி திடீரென கடந்த வியாழக்கிழமை டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து பேசினார்.
அப்போது காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று ராகுல்காந்தியை சரத்பவார் அறிவுறுத்தியதாக கூறப்பட்டது.
கட்சி இணைப்பா?
மேலும் இந்த சந்திப்பை தொடர்ந்து, காங்கிரசுடன் தேசியவாத காங்கிரஸ் இணையப்போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின. 1999-ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியை நிறுவுவதற்கு முன் சரத்பவார் காங்கிரசில் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். சோனியா காந்தி வெளிநாட்டுக்காரர் என்ற பிரச்சினையில் காங்கிரசை விட்டு விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியை சரத்பவார் தொடங்கினார். அடுத்த சில ஆண்டுகளிலேயே காங்கிரசுடன் கூட்டணி வைத்த அவர் தற்போது கூட ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் நீடிக்கிறார்.
இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தோல்வி மற்றும் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள மராட்டிய சட்டமன்ற தேர்தல் வியூகம் குறித்து நேற்று மும்பையில் கட்சி தலைவர்களுடன் சரத்பவார் ஆலோசனை நடத்தினார்.
வதந்தி
பின்னர் அவர் நிருபர்களை சந்தித்தபோது, காங்கிரசுடன் தேசியவாத காங்கிரஸ் இணையுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சரத்பவார் பதிலளித்து கூறுகையில், “தேசியவாத காங்கிரஸ் கட்சி தனித்த அடையாளத்தை கொண்டுள்ளது. இதை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளும். காங்கிரஸ் கட்சியுடன் இணையப்போவதாக பரவும் தகவல் சில ஊடகங்கள் பரப்பிய வதந்தி” என்றார்.
மேலும் சரத்பவார், “மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மீது எனக்கு முன்பிருந்தே சந்தேகம் இருந்தது. மத்தியில் ஆட்சியில் இருந்தபோதும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஷ்கர் மாநில சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா தோல்வியுற்றது. இந்த தோல்விகள் வேண்டுமென்றே நாடாளுமன்ற வெற்றிக்காக செய்யப்பட்ட தந்திரமோ என தற்போது தோன்றுகிறது” என்றார்.
Related Tags :
Next Story