கன்னியாகுமரியில் கடல் சீற்றம்: விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து நிறுத்தம்


கன்னியாகுமரியில் கடல் சீற்றம்: விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து நிறுத்தம்
x
தினத்தந்தி 3 Jun 2019 4:30 AM IST (Updated: 2 Jun 2019 8:38 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியில் கடல் சீற்றத்தால் விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

கன்னியாகுமரி,

உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இங்கு, கடலின் நடுவே உள்ள பாறையில் விவேகானந்தர் மண்டபமும், அதன் அருகே உள்ள மற்றொரு பாறையில் திருவள்ளுவர் சிலையும் உள்ளன. இவற்றை சுற்றுலா பயணிகள் பார்வையிட வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் பொதிகை, குகன், விவேகானந்தா என 3 படகுகள் இயக்கப்படுகிறது. இந்த படகுகள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்கும்.

விடுமுறை தினமான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்தனர். அவர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று படகில் ஏறி விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்றுகொண்டிருந்தனர்.

மதியம் 1 மணியளவில் திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டது. ராட்சத அலைகள் எழுந்து கரை நோக்கி பாய்ந்த வண்ணம் இருந்தன. இதனால், விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அத்துடன், ஏற்கனவே அழைத்து செல்லப்பட்டிருந்த சுற்றுலா பயணிகள் அவசரம் அவசரமாக கரைக்கு அழைத்து வரப்பட்டனர். திருவள்ளுவர் சிலைக்கு நேற்று காலை முதல் படகு போக்குவரத்து நடைபெறவில்லை.

முக்கடல் சங்கம கடற்கரையில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் கடல் சீற்றத்தால் அலறியடித்து கொண்டு ஓடினர். அத்துடன், சுற்றுலா போலீசார் ரோந்து சென்று யாரும் கடலில் இறங்காதவாறு கண்கணித்தனர்.

Next Story