புதிய பயண அட்டை கிடைக்கும் வரை பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மூலம் பயணிக்கலாம் மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு


புதிய பயண அட்டை கிடைக்கும் வரை பள்ளி மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மூலம் பயணிக்கலாம் மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பு
x
தினத்தந்தி 3 Jun 2019 3:30 AM IST (Updated: 2 Jun 2019 9:58 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் இன்று(திங்கட்கிழமை) முதல் வழக்கம் போல் செயல்பட உள்ளன.

சென்னை,

மாணவர்கள் பள்ளிகளுக்கு மாநகர பஸ்கள் மூலம் சென்று வருவதற்கு வசதியாக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் ஆண்டுதோறும் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகின்றன.

பள்ளிகள் இன்று திறக்கப்பட்டாலும், மாணவர்களுக்கு புதிய பஸ் பாஸ்கள் கையில் கிடைப்பதற்கு ஓரிரு மாதங்கள் ஆகும். எனவே மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு புதிய பாஸ் கிடைக்கும் வரையில் பழைய பாஸ் மூலமே மாநகர பஸ்சில் மாணவர்கள் பயணிக்கலாம் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கடந்த 2017-ம் ஆண்டுக்கு பின்னர் மாணவர்களுக்கு பஸ் பாஸ் ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அட்டையில் ‘பாஸ்’ வழங்கப்படும் தேதி மட்டும் இடம் பெற்றிருக்கும். முடிவடையும் தேதி இருக்காது. எனவே புதிய ‘ஸ்மார்ட் கார்டு’ பாஸ் கிடைக்கும் வரையில் மாணவர்கள் பழைய பாஸ் மூலமே பஸ்சில் பயணிக்கலாம்.

பொதுவாக மாணவர்கள் பள்ளி சீருடையில் இருந்தாலே மாநகர பஸ்சில் இலவசமாக அனுமதிக்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சரும், போக்குவரத்துத்துறை அமைச்சரும் அறிவுறுத்தி இருக்கிறார்கள். சென்னையில் கடந்த ஆண்டு 3.5 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு இலவச பாஸ் வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் அதே போன்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story