தேனியில் நோய் பரப்பும் அபாயத்தில் தாமரைக்குளம் கண்மாய்; துர்நாற்றத்தால் மக்கள் பாதிப்பு


தேனியில்  நோய் பரப்பும் அபாயத்தில் தாமரைக்குளம் கண்மாய்; துர்நாற்றத்தால் மக்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 3 Jun 2019 4:00 AM IST (Updated: 2 Jun 2019 10:42 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் தாமரைக்குளம் கண்மாய் தண்ணீர் மாசுப்பட்ட நிலையில் உள்ளதோடு, துர்நாற்றமும் வீசுவதால், தொற்றுநோய் பரப்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தேனி,

தேனி–மதுரை சாலையில் கலெக்டர் அலுவலகம் அருகில் தாமரைக்குளம் கண்மாய் அமைந்துள்ளது. இந்த கண்மாய் மூலம் சுமார் 200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. இந்த கண்மாய்க்கு கொட்டக்குடி ஆற்றில் இருந்து ராஜவாய்க்கால் மூலம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக ராஜவாய்க்கால் தூர்வாரப்படாமல் புதர்மண்டிக் கிடக்கிறது. இதனால், கொட்டக்குடி ஆற்றில் இருந்து கண்மாய்க்கு தண்ணீர் வருவதும் தடைபட்டுள்ளது.

இதன்காரணமாக கண்மாய் வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தேனியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த திட்டத்துக்கான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இந்த கண்மாய் கரையோரம் அமைக்கப்பட்டது. கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு கண்மாயில் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது.

தொடக்கத்தில் தண்ணீர் துர்நாற்றம் இன்றி இருந்தது. பின்னர் தண்ணீரில் துர்நாற்றம் வீசத் தொடங்கியது. தற்போது இந்த தண்ணீர் பச்சை நிறத்தில் மாறி உள்ளதோடு, வெள்ளை நிறத்தில் நுரையாகவும் காணப்படுகிறது. மதுரை சாலையில் செல்லும் போதே கண்மாயில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. அப்பகுதியில் குடியிருக்கும் மக்களும் துர்நாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தண்ணீர் மாசுபட்ட நிலையில் உள்ளதால் இதன்மூலம் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, இந்த கண்மாயை சுகாதாரக்கேட்டில் இருந்து மீட்கவும், பாதாளசாக்கடை கழிவுநீரை சுத்திகரித்து உரிய சோதனைகள் நடத்தி பாதிப்புகள் இல்லை என்று உறுதி செய்த பின்னர் கண்மாயில் நிரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.


Next Story