திருவண்ணாமலையில் பரபரப்பு அரசு பஸ்சில் டிக்கெட் எடுக்க மறுத்து கண்டக்டரை தாக்கிய ஆயுதப்படை போலீஸ்காரர்
திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் சென்னைக்கு செல்லும் இடைநில்லா பஸ்சில் ஏறிய ஆயுதப்படை போலீஸ்காரர், டிக்கெட் எடுக்க மறுத்து கண்டக்டரை தாக்கினார். இதனை கண்டித்து பஸ் நிலையத்தில் அனைத்து பஸ்களையும் எடுக்காமல் டிரைவர், கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பஸ் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. கோடைவிடுமுறை முடிந்து இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுவதால் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணியளவில் பஸ் நிலையத்தில் சென்னை செல்வதற்காக ‘அல்ட்ரா டீலக்ஸ்’ பஸ் ஒன்று அதற்கான இடத்தில் நிறுத்தப்பட்டது. இந்த பஸ் திருவண்ணாமலையில் இருந்து புறப்படுவதற்கு முன்பே கண்டக்டர் அனைத்து பயணிகளுக்கும் டிக்கெட் கொடுத்து விட்டு இறங்கிவிடுவார். இடையில் எங்கும் நிற்காமல் பஸ் விரைவாக செல்வதால் அந்த பஸ்சில் பயணிகள் முண்டியடித்துக்கொண்டு ஏறி அமர்ந்தனர்.
பயணிகளுக்கு திருவண்ணாமலை புதுவாணியங்குளத் தெருவை சேர்ந்த வடிவழகன் (வயது 43) என்ற கண்டக்டர் டிக்கெட் கொடுத்துக் கொண்டு இருந்தார். பஸ்சில் திருக்கோவிலூரை சேர்ந்த ரகோத்தமன் (29) என்ற ஆயுதப்படை போலீஸ்காரர் சீருடையின்றி சாதாரண உடையில் இருந்து உள்ளார்.
அவர் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவரிடம் கண்டக்டர் வடிவழகன் டிக்கெட் எடுக்குமாறு கூறியுள்ளார். அப்போது ரகோத்தமன் நான் போலீஸ்காரர், எனக்கு பஸ் பாஸ் உள்ளது என கூறியுள்ளார். அதற்கு வடிவழகன், இது கண்டக்டர் இல்லா பஸ், இதில் டிக்கெட் எடுத்தால் மட்டுமே பயணம் செய்ய முடியும். பஸ்பாஸ் உள்ளவர்களை இதில் அனுமதிக்க முடியாது. இதனால் நீங்கள் அருகில் உள்ள பஸ்சில் செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
அதனை ஏற்க மறுத்த போலீஸ்காரர் ரகோத்தமன் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த ரகோத்தமன் திடீரென வடிவழகனை தாக்கினார். இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த தாக்குதலில் வடிவழகனுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. இதனால் பஸ் நிலையத்தில் உள்ள டிரைவர்கள், கண்டக்டர்கள் சேர்ந்து போலீஸ்காரர் ரகோத்தமனை பிடித்து பஸ் நிலையத்தில் உள்ள போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் சட்டையின்றி அமர வைத்தனர்.
மேலும் இது குறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் “ரகோத்தமன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பஸ்களை எடுக்கமாட்டோம்” என்று அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பஸ்களை அங்கேயே நிறுத்தி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த திருவண்ணாமலை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையில் போலீசார் பஸ் நிலையத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீசார் போக்குவரத்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி ரகோத்தமனை கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் இது குறித்து வடிவழகன் திருவண்ணாமலை கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரகோத்தமன் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததையடுத்து டிரைவர், கண்டக்டர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் 45 நிமிடத்துக்கு பிறகு பஸ்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டு சென்றன. இதனால் திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story