சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு: விண்ணப்பித்ததில் பாதிபேர் எழுத வரவில்லை


சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு: விண்ணப்பித்ததில் பாதிபேர் எழுத வரவில்லை
x
தினத்தந்தி 3 Jun 2019 4:00 AM IST (Updated: 3 Jun 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் பாதிபேர் எழுத வரவில்லை.

புதுச்சேரி,

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்பட 26 பணிகளை உள்ளடக்கிய சிவில் சர்வீசஸ் தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தி வருகிறது.

இந்த ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்தனர்.

சிவில் சர்வீசஸ் பணிகளுக்கான முதல்நிலை தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா முழுவதும் 72 நகரங்களில் நடைபெற்றது. புதுச்சேரியில் விவேகானந்தா பள்ளி, பெத்திசெமினார் பள்ளி, இமாகுலேட் பள்ளி, நாவலர் நெடுஞ்செழியன் பள்ளி உள்ளிட்ட இடங்களில் 8 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

முதல்நிலை தேர்வு 2 தாள்களாக பிரித்து நடத்தப்பட்டது. காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையில் முதல் தாளும், பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரையில் 2-ம் தாளும் என தேர்வு நடந்தது.

இந்த தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையத்துக்கு செல்வதற்கு வசதியாக புதுவை புதிய பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தேர்வுகள் காலை 9.30 மணிக்கு தொடங்கும் என்றும் தேர்வு மையத்துக்குள் 9.20 மணிக்குள்ளும் பிற்பகலில் 2.30 மணிக்கு நடக்கும் தேர்வுக்கு 2.20 மணிக்குள்ளும் தேர்வு எழுதுவோர் ஆஜராக வேண்டியது அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால் குறிப்பிட்ட நேரத்துக்குள் வர தவறியதால் பலர் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

புதுவை மையங்களில் தேர்வினை எழுத 3 ஆயிரத்து 25 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் காலையில் நடந்த தேர்வினை 1,603 பேர் எழுதினார்கள். பிற்பகலில் அதிலும் சிலர் வரவில்லை. 1,597 பேர் மட்டுமே தேர்வினை எழுதினார்கள். விண்ணப்பித்தவர்களின் கிட்டத்தட்ட பாதிபேர் இந்த தேர்வுகளை எழுதவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story