தவளக்குப்பம் - பூரணாங்குப்பம் சந்திப்பில் தடுப்பு கட்டையில் கார் மோதி ‘ஜிம்’ பயிற்சியாளர் பேத்தியுடன் பலி


தவளக்குப்பம் - பூரணாங்குப்பம் சந்திப்பில் தடுப்பு கட்டையில் கார் மோதி ‘ஜிம்’ பயிற்சியாளர் பேத்தியுடன் பலி
x
தினத்தந்தி 2 Jun 2019 11:00 PM GMT (Updated: 2 Jun 2019 7:34 PM GMT)

தவளக்குப்பம்-பூரணாங்குப்பம் சந்திப்பில் கார் தடுப்பு கட்டையில் மோதியதில் ‘ஜிம்’ பயிற்சியாளர் தனது பேத்தியுடன் பரிதாபமாக இறந்தார். இதனால் விரக்தி அடைந்த மருமகன் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாகூர்,

புதுவை முதலியார்பேட்டை மாங்காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 59). உப்பளம் இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் (ஜிம்) பயிற்சியாளராக இருந்து வந்தார். இவருடைய மகள் வினோதினி. கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.

வினோதினிக்கும், கடலூர் கூத்தப்பாக்கத்தை சேர்ந்த டாக்டர் ராஜேஷ் என்பவருக்கும் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1½ வயதில் வெண்பா என்ற பெண் குழந்தை இருந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு டாக்டர் ராஜேசுக்கு அம்மை நோய் ஏற்பட்டது. குழந்தைக்கு நோய் பரவாமல் இருக்க புதுச்சேரியில் உள்ள பார்த்திபன் வீட்டுக்கு குழந்தை வெண்பாவை அனுப்பி வைக்க முடிவு செய்தனர். இதற்காக நேற்று முன்தினம் மாலை ராஜேஷ் தனது மாமனார் பார்த்திபனிடம் குழந்தையை அழைத்துச் செல்லுமாறு தெரிவித்தார்.

அதன்படி அவர் காரில் கடலூர் கூத்தப்பாக்கத்துக்கு சென்றார். காரை கிளியனூரை சேர்ந்த டிரைவர் சுதாகர் ஓட்டி சென்றார். மகள் வீட்டில் மருமகனிடம் உடல்நலம் விசாரித்துவிட்டு இரவு 11 மணி அளவில் பேத்தி வெண்பாவை அழைத்துக்கொண்டு காரில் புதுச்சேரிக்கு பார்த்திபன் புறப்பட்டார்.

தவளக்குப்பம்-பூரணாங்குப்பம் 4 முனை சந்திப்பில் வந்தபோது திடீரென்று கார் டிரைவர் சுதாகரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையின் தடுப்பு கட்டையில் வேகமாக மோதியது. இதில் பார்த்திபன், அவரது பேத்தி வெண்பா மற்றும் கார் டிரைவர் சுதாகர் ஆகியோர் காரின் இடுபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தனர்.

இதை அந்த பகுதியில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசாருக்கும், தவளக்குப்பம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பார்த்திபன், சிறுமி வெண்பா, டிரைவர் சுதாகர் ஆகியோரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பார்த்திபனும், அவரது பேத்தி வெண்பாவும் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். டிரைவர் சுதாகருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த பார்த்திபன் மகள் வினோதினி, மருமகன் ராஜேஷ் ஆகியோர் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். அங்கு பார்த்திபன், குழந்தை வெண்பா ஆகியோர் இறந்ததை அறிந்த வினோதினி, அவரது கணவர் ராஜேஷ் ஆகியோர் கதறி அழுதனர். அப்போது ராஜேஷ் தன்னால் தான் மாமனார், குழந்தை வெண்பா இறந்ததாக உறவினரிடம் சொல்லி கதறி அழுதார்.

இந்தநிலையில் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்து புதுவை கடற்கரைக்கு ராஜேஷ் சென்றார். திடீரென அவர் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து ராஜேஷை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே தந்தை, மகள் இறந்த துக்கத்தில் இருந்த டாக்டர் வினோதினி கணவர் ராஜேஷ் தற்கொலைக்கு முயன்று ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருவதை பார்த்து கதறி அழுதார். இது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. இந்த சம்பவம் காரணமாக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story