எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்துக்கு வர வேண்டும் - நாராயணசாமி அழைப்பு
எதிர்க்கட்சிகள் இன்று நடைபெறும் சட்டமன்ற கூட்டத்துக்கு வரவேண்டும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி அழைப்பு விடுத்தார்.
புதுச்சேரி,
புதுவை சபாநாயகர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. ஆளுங்கட்சி சார்பில் துணை சபாநாயகரான சிவக்கொழுந்து போட்டியிட மட்டுமே மனுதாக்கல் செய்யப்பட்டது. எனவே அவர் போட்டியின்றி தேர்வாகிறார்.
இன்று (திங்கட்கிழமை) நடக்கும் சட்டசபை கூட்டத்தின்போது புதிய சபாநாயகராக சிவக்கொழுந்து பொறுப்பேற்கிறார். அவரை மரபுப்படி முதல்–அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் சபாநாயகர் இருக்கையில் அமர வைத்து வாழ்த்து தெரிவிப்பார்கள். ஆனால் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் சபாநாயகர் தேர்தலை புறக்கணிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வசதியாக வைத்திலிங்கம் தான் வகித்துவந்த சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் தேர்தலில் வெற்றியும் பெற்றுள்ளார். எனவே புதிய சபாநாயகரை தேர்வு செய்ய சட்டசபையை கூட்ட அமைச்சரவையில் முடிவு செய்து கவர்னருக்கு கோப்புகளை அனுப்பினோம்.
அதற்கு கடந்த 30–ந்தேதி ஒப்புதல் பெற்று அரசிதழில் வெளியிடப்பட்டு மனுதாக்கல் செய்ய சட்டசபை செயலாளர் அறிவிப்பு வெளியிட்டார். எம்.எல்.ஏ.க்களுக்கு நியமன கடிதங்களையும் அனுப்பினார். அதன்பின் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஒப்புதலோடு காங்கிரஸ், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் கலந்து பேசினோம். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை நானும், காங்கிரஸ் தலைவரான அமைச்சர் நமச்சிவாயமும் சந்தித்து பேசினோம்.
அதன் அடிப்படையில் நானும் அமைச்சர்களும் சபாநாயகர் தேர்தலில் துணை சபாநாயகர் சிவக்கொழுந்து போட்டியிட மனுதாக்கல் செய்துள்ளோம். தற்போது எதிர்க்கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக தகவல்கள் வந்துள்ளது. சபாநாயகர் என்பவர் கட்சி பாகுபாடு பார்க்காதவர். அப்படிதான் வைத்திலிங்கம் செயல்பட்டார்.
தற்போது எதிர்க்கட்சிகள் வேட்புமனு எதுவும் செய்யாததால் சிவக்கொழுந்து சபாநாயகராக தேர்வாகிறார். எனவே அவரை வாழ்த்த எதிர்க்கட்சி தலைவர்கள் சட்டசபைக்கு வரவேண்டும். சட்டமன்ற கூட்டத்தை புறக்கணிக்கக் கூடாது. அவர்களும் கண்டிப்பாக வருவார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.