மணல் கடத்தலை தடுக்கச்சென்ற சப்-இன்ஸ்பெக்டரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி
மணல் கடத்தலை தடுக்கச்சென்ற போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை லாரி ஏற்றி கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்,
விழுப்புரத்தை அடுத்த வி.அகரம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று முன்தினம் இரவு வளவனூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிக்கொண்டு வந்த ஒரு லாரியை சோதனை செய்வதற்காக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழிமறித்தார். அந்த சமயத்தில் லாரி டிரைவர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மீது மோதுவதுபோல் வந்தார். இதில் சுதாரித்துக்கொண்ட அவர் ஒதுங்கி கொண்டார்.
பின்னர் அந்த லாரியை போலீசார் மடக்கிப்பிடித்தனர். இதில் லாரியில் வந்த 2 பேரில் ஒருவர் மட்டும் பிடிபட்டார். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். விசாரணையில் பிடிபட்ட நபர், விழுப்புரம் அருகே சின்னமடத்தை சேர்ந்த லாரி உரிமையாளரான கோகுல் என்கிற கோகுலகிருஷ்ணன் (வயது 24) என்பதும், தப்பி ஓடியவர் லாரி டிரைவரான அரசூரை சேர்ந்த ராஜேஷ் என்பதும், இவர்கள் இருவரும் சின்னக்கள்ளிப்பட்டு பகுதியில் உள்ள தென்பெண்ணையாற்றில் இருந்து மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து கோகுல், ராஜேஷ் ஆகியோர் மீது கொலை முயற்சி பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுலை கைது செய்தனர். ராஜேசை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story