அருப்புக்கோட்டையில் பயங்கரம்; மாட்டு கொட்டகையில் தூங்கிய வாலிபர் வெட்டிக்கொலை, போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு


அருப்புக்கோட்டையில் பயங்கரம்; மாட்டு கொட்டகையில் தூங்கிய வாலிபர் வெட்டிக்கொலை, போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 2 Jun 2019 11:45 PM GMT (Updated: 2 Jun 2019 7:49 PM GMT)

அருப்புக்கோட்டையில் மாட்டுகொட்டகையில் தூங்கிய வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அருப்புக்கோட்டை,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புளியம்பட்டி அம்பேத்கர் பகுதியை சேர்ந்தவர் பெரிய கருப்பசாமி. இவரது மகன் கருப்பசாமி (வயது 19). தச்சுத்தொழிலாளியான இவர் செவல்கண்மாய் பகுதியில் உள்ள தனது மாமா சாமி துரைக்கு சொந்தமான மாட்டு கொட்டகையில் இரவில் படுப்பது வழக்கமாகும்.

வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு மற்றொரு மாமாவான கருப்பையாவுடன் மாட்டு கொட்டகையில் படுத்து இருந்தார். நேற்று காலை அந்த கொட்டகைக்கு பால்கறக்க பால்காரர் வந்துள்ளார். அப்போது அங்கு வெட்டுக்காயங்களுடன் கருப்பசாமி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதனைக்கண்டு பால்காரர் அதிர்ச்சி அடைந்து கருப்பசாமியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து பார்த்து கதறி அழுதனர். கருப்பசாமியுடன் படுத்திருந்த மாமா கருப்பையா மதுபோதையில் உறங்குவதை கண்டனர். அவரை எழுப்பி கேட்ட போது எந்த தகவலும் கிடைக்கவில்லை. நள்ளிரவில் கொட்டகைக்குள் புகுந்த கும்பல் கருப்பசாமியை சரமாரியாக வெட்டி சாய்த்துள்ள னர்.

இது குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கருப்பசாமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த 8 பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி கருப்பசாமியின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு உருவானது. போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் ஆகியோர் வந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.

கொலை தொடர்பாக கருப்பசாமியின் தாயார் பழனியம்மாள் போலீசாரிடம் கொடுத்த புகார் மனுவில் சின்னபுளியம்பட்டியை சேர்ந்த சுப்பிரமணி(38) என்பவருக்கும் தனது மகனுக்கும் பதுக்கி வைத்து மது விற்றதில் பிரச்சினை இருந்ததாகவும் அதேபோல அருப்புக்கோட்டை மலையரசன் கோவில் தெருவை சேர்ந்த சிரஞ்சீவி (25) என்பவருக்கும் தனது மகனுக்கும் செல்போன் திருடு போனது தொடர்பாக பிரச்சினை இருந்ததாகவும் கூறியிருந்தார்.போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரித்ததில் கொலையில் அவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. முன்விரோதத்தில் சிலருடன் சேர்ந்து கருப்பசாமியை தீர்த்துக்கட்டியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்பேரின் 2 பேரும் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்கள். மேலும் சிலர் மீதும் சந்தேகம் இருப்பதால் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

Next Story