மானாமதுரை தொகுதியில் அடிப்படை வசதி செய்து கொடுக்கப்படும் - நாகராஜன் எம்.எல்.ஏ. உறுதி
மானாமதுரை தொகுதி மக்களுக்கான அனைத்து அடிப்படைவசதியும் உடனுக்குடன் செய்து கொடுக்கப்படும் என்று நாகராஜன் எம்.எல்.ஏ. கூறினார்.
மானாமதுரை,
மானாமதுரை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட நெட்டூர் நாகராஜன் வெற்றி பெற்றார். அவர் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்ற பின்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தும், அவர்களின் குறைகளை கேட்டும் வருகிறார். நேற்று காலை இளையான்குடி ஒன்றியத்தை சேர்ந்த எஸ்.காரைக்குடியில் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், பின்பு தெ.புதுக்கோட்டை, சின்ன புதுக்கோட்டை, கோச்சடை, பிராமணகுறிச்சி, குறிச்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று நன்றி கூறிவிட்டு, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது அவர் பேசும் போது கூறியதாவது:– எனக்கு நம்பிக்கையுடன் வாக்களித்த உங்களுக்கு என்றும் நம்பிக்கையுடன் செயல்பட்டு தொகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை முன்னுரிமை கொடுத்து செய்வேன். தனக்கு பெருவாரியான வாக்குகள் அளித்து வெற்றி பெற செய்து, மானாமதுரை தொகுதி அ.தி.மு.க.வின் கோட்டை என நிரூபித்துள்ளீர்கள்.
பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம், சாலை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவேன், அ.தி.மு.க. ஆளும் கட்சி என்பதால் தொகுதி மக்களுக்கு அரசின் திட்டங்கள் அனைத்தும் முழுமையாக கிடைக்கும்படி நடவடிக்கை எடுக்கப்படும். தொகுதி மக்கள் தங்களின் பிரச்சினைகளுக்காக எந்த நேரத்திலும் என்னை சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம்.
அவற்றை உடனுக்குடன் செய்து கொடுத்து உங்களது தேவைகளை நிறைவேற்றி வைப்பேன். மேலும் நமது மாவட்ட அமைச்சரான பாஸ்கரன், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் உள்ளிட்ட அனைவரும் மானாமதுரை தொகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக உறுதியளித்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். எம்.எல்.ஏ. நாகராஜனுடன் இளையான்குடி ஒன்றிய செயலாளர் பாரதிராஜன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்றனர்.