மரங்களில் தண்ணீர் குடுவைகள் வைத்து பறவைகளின் தாகம் தீர்க்கும் ஐ.டி.ஐ. மாணவர்


மரங்களில் தண்ணீர் குடுவைகள் வைத்து பறவைகளின் தாகம் தீர்க்கும் ஐ.டி.ஐ. மாணவர்
x
தினத்தந்தி 3 Jun 2019 4:30 AM IST (Updated: 3 Jun 2019 1:19 AM IST)
t-max-icont-min-icon

மேலூர் அருகே ஐ.டி.ஐ. மாணவர் ஒருவர் மரங்களில் தண்ணீர் குடுவைகள் அமைத்து பறவைகளின் தாகம் தீர்த்து வருகிறார்.

மேலூர்,

மேலூர் அருகே உள்ள ரெங்கசாமிபுரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 19). இவர் மதுரையில் உள்ள அரசு ஐ.டி.ஐ.யில் 2–ம் ஆண்டு படித்து வருகிறார். அதே கிராமத்தில் நோபல் அறிவியல் மன்றத்தினை உருவாக்கி, அறிவியல் கண்டுபிடிப்புகள் பலவற்றை முருகன் கண்டுபிடித்துள்ளார். சமீபத்தில் அவர் கண்டுபிடித்த தண்ணீரில் இருசக்கர வாகனத்தை ஓட்டி காட்டி பலரையும் திரும்பி பார்க்க வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அறிவியல் கண்டுபிடிப்பு மட்டுமின்றி அவர் சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார்.

தற்போது கோடைகாலம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வறட்சியால் நகரம் மற்றும் கிராமங்களில் தண்ணீரின்றி நீர்நிலைகள் வற்றி போய்விட்டன. இதனால் தண்ணீரின்றி பறவைகள் தவித்து வருவதை அறிந்த முருகன், மரங்களில் குடுவைகளை கட்டி தொங்கவிட்டு அவற்றில் தண்ணீரை நிரப்பி பறவைகளில் தாகத்தை தீர்க்கலாம் என்று முடிவு செய்தார்.

அதன்படி தற்போது தனது கிராமம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலும் மரங்களில் குடுவைகள் அமைத்து அதில் தண்ணீரை நிரப்பி வருகிறார். அவருடன் சேர்ந்து சில இளைஞர்கள் இந்த பணியை செய்து வருகின்றனர். தற்போது அந்த கிராமங்களுக்கு வரும் பறவைகள் மரங்களில் வைக்கப்பட்டுள்ள குடுவைகளில் தண்ணீரை அருந்தி தாகம் போக்கி வருகின்றன.

இதுகுறித்து ஐ.டி.ஐ. மாணவர் முருகன் கூறியதாவது:–

தற்போது கோடைகாலம் என்பதால் பறவைகள், பல்லுயிரினங்கள் மிகவும் தண்ணீரின்றி தவித்து வருகின்றன. அவைகளை காப்பற்றும் வகையிலும், தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் நானும், என்னை போன்ற எங்களது குழுவினரும் இதுவரை சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமான மரங்களில் தண்ணீர் குடுவைகளை ஏற்படுத்தியுள்ளோம். 2 நாட்களுக்கு ஒருமுறை கண்காணித்து மீண்டும் தண்ணீரை நிரம்பி பறவைகளின் தாகம் தீர்த்து வருகிறோம். இதேபோல் அனைத்து பொதுமக்களும் முன்வந்து தங்களால் முயன்ற தண்ணீரை பறவைகளுக்கு வைத்து உதவ வேண்டும். பறவை இனங்களை காக்க வேண்டும்.


Next Story