மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும் வரை போராட்டம்


மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும் வரை போராட்டம்
x
தினத்தந்தி 3 Jun 2019 4:00 AM IST (Updated: 3 Jun 2019 1:31 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் நடத்துவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

நெய்வேலி,

நெய்வேலியில் சி.ஐ.டி.யு. விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் கோரிக்கைகள் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கருப்பையன் தலைமை தாங்கினார். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஏழுமலை, மாவட்ட செயலாளர் பிரகாஷ், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட தலைவர் முத்துலட்சுமி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விவசாயிகள் சங்க அகில இந்திய துணைத்தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளருமான கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் என்.எல்.சி. சி.ஐ.டி.யு. சங்க நிர்வாகிகள் வேல்முருகன், ஜெயராமன், சீனுவாசன், குப்புசாமி, மாவட்ட துணை தலைவர் ஆறுமுகம், என்.எல்.சி.யில் பழகுனர் பயிற்சி முடித்தவர்கள், வீடு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவர்கள், பணியின்போது இறந்த தொழிலாளர்களின் வாரிசுகள், சி.ஐ.டி.யு. சங்க துணை தலைவர்கள், பகுதி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் இந்த கோடை காலத்தில் வறட்சி அதிகமாக உள்ளது. பல இடங்களில் மக்கள் குடிநீர் கேட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மக்களின் குடிநீர் தேவையை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

காவிரி மேலாண்மை உத்தரவை கர்நாடக அரசு செயல்படுத்தாததால் குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொள்ள முடியவில்லை. நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. நிறுவனத்தில் வேலைவாய்ப்பில் நெய்வேலியை சுற்றியுள்ள கிராம மக்களுக்கும், கடலூர் மாவட்ட மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

என்.எல்.சி. நிறுவனத்தில் உள்ள நிரந்தரத்தன்மை உள்ள வேலைகளை செயல்படுத்தும் தனியார் நிறுவனங்களை வெளியேற்றி இப்பகுதியில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கிட வேண்டும். கடலூர் மாவட்டத்தில் அமைய உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் தமிழகம் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். குறிப்பாக கடலூர் மாவட்ட மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.

இந்த திட்டத்தால் கடலூர் மாவட்டமே வருகிற 5 ஆண்டுகளில் பாலைவனமாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டு விடும். எனவே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பொதுமக்களின் ஆதரவோடு ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடும் வரை போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நடத்தும்.

மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் பாதிப்புகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி வருகிற 5-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை கடலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது.

சேலம்- சென்னை 8 வழிச்சாலை அமைப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும். 8 வழிச்சாலை அமைக்க செலவிடப்படும் தொகையை தமிழ்நாட்டில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரி தடுப்பணை அமைத்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.

Next Story