வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3½ லட்சம் மோசடி: தொழிலாளி விஷம் குடித்ததால் பரபரப்பு கடலூரில் சம்பவம்


வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3½ லட்சம் மோசடி: தொழிலாளி விஷம் குடித்ததால் பரபரப்பு கடலூரில் சம்பவம்
x
தினத்தந்தி 2 Jun 2019 10:45 PM GMT (Updated: 2 Jun 2019 8:19 PM GMT)

வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.3½ லட்சம் மோசடி செய்ததால் மனமுடைந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர், 

குறிஞ்சிப்பாடி தாலுகா ஆயிப்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்தவர் குமரவேல்(வயது 42). தொழிலாளி. இவரிடம் கடலூர் குண்டு உப்பலவாடி என்.ஜி.ஓ. நகரை சேர்ந்த நபர் ஒருவர் கனடா நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறினார்.

இதை நம்பிய குமரவேல் கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் ரூ.3½ லட்சத்தை கொடுத்தார். மீதி பணத்தை விசா வந்தவுடன் தருவதாக கூறினார். ஆனால் நாட்கள் தான் சென்றதே தவிர பணத்தை வாங்கிய நபர் குமரவேலை கனடா நாட்டுக்கு அனுப்பி வைக்கவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த குமரவேல் வேலை வாங்கி தருவதாக கூறிய நபரிடம் சென்று தன்னை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்குமாறும், இல்லை என்றால் வாங்கிய பணத்தை திருப்பி தருமாறும் கேட்டார். இதற்கு அந்த நபர் பணத்தை திருப்பி தந்துவிடுவதாக கூறினார். ஆனால் 1 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் பணத்தை திருப்பி தரவில்லை. இந்த நிலையில் குமரவேலுக்கு பணத்தை கொடுத்த நபர்கள், அவரது வீட்டை தேடி சென்று பணத்தை திருப்பி கேட்க ஆரம்பித்தனர். இதனால் அவர் கடுமையான பண நெருக்கடிக்கும் மனவேதனைக்கும் ஆளாகி வந்தார்.

இந்த நிலையில் குமரவேல் நேற்று மாலை கடலூர் குண்டு உப்பலவாடி என்.ஜி.ஓ.நகரில் தனக்கு வேலைவாங்கி தருவதாக கூறிய நபரின் வீட்டுக்கு வந்தார். ஆனால் அங்கே அந்த நபரின் மாமியாரை தவிர வீட்டில் யாரும் இல்லை. அவரிடம் பணத்தை கேட்டபோது தனக்கு எதுவும் தெரியாது என கூறிவிட்டார்.

இதனால் மனமுடைந்த குமரவேல் ஏற்கனவே தான் வாங்கி வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து தேவனாம்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவத் தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story