கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு: சேலத்தில் புத்தகப்பைகள் வாங்க அலைமோதிய பெற்றோர்


கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு: சேலத்தில் புத்தகப்பைகள் வாங்க அலைமோதிய பெற்றோர்
x
தினத்தந்தி 2 Jun 2019 10:30 PM GMT (Updated: 2 Jun 2019 8:27 PM GMT)

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படுவதால் புத்தகப்பை உள்ளிட்ட பள்ளிக்கு தேவையான பொருட்களை வாங்க சேலத்தில் நேற்று பெற்றோர், மாணவர்கள் கூட்டம் அலைமோதியது.

சேலம், 

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 14-ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட தமிழகம் முழுவதும் கோடை வெயில் அதிகமாக இருந்தது. சேலத்தில் அதிக பட்சமாக 106 டிகிரி வரை வெயில் அடித்து பொதுமக்களை வாட்டி வதைத்தது.

கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 3-ந்தேதி (இன்று) பள்ளிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்து இருந்தது. கோடை வெயில் அதிகம் இருப்பதால் பள்ளிகள் திறக்கப்படும் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று பெற்றோர் தரப்பில் அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது. ஆனால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்து உள்ளது.

அதன்படி கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. இதனால் தங்கள் பிள்ளைகள், பள்ளிக்கு நோட்டு, புத்தகம் கொண்டு செல்வதற்கு வசதியாக புதிய புத்தகப்பைகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க சேலத்தில் கடைகளில் பெற்றோர்கள் குவிந்தனர்.

பின்னர் தங்களுக்கு பிடித்த புத்தகப்பைகளை அவரவர் வசதிக்கு ஏற்ற விலைகளில், பிடித்தமான நிறத்தில் வாங்கி தங்கள் குழந்தைகளுக்கு கொடுத்தனர். அதே போன்று பேனா, பென்சில், ரப்பர் ஆகியவை வைத்துக்கொள்வதற்கு தேவையான டப்பாக்கள் வாங்கி தங்கள் பிள்ளைகளுக்கு கொடுத்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக பள்ளி திறந்த முதல் நாளிலேயே மாணவ, மாணவிகளுக்கு அரசு சீருடைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அவைகள் துணிகளாகத்தான் வழங்கப்படுகிறது. எனவே அதை வாங்கி தைத்து போடுவதற்கு கால தாமதம் ஆகும் என்பதால், ஒரு சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து தைத்து ரெடிமேடாக விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ள பள்ளி சீருடைகளை வாங்கிச்சென்றனர். அதன்படி பள்ளி மாணவ, மாணவிகள் புத்தகப்பை உள்ளிட்ட பள்ளிக்கு செல்வதற்கு தேவையான பொருட்கள் வாங்க வந்திருந்ததால் நேற்று சேலத்தில் கடைகளில் பெற்றோர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கூட்டம் அலைமோதிய காட்சியை காண முடிந்தது.

Next Story