ஏற்காடு கோடை விழா நிறைவு: சுற்றுலா பயணிகளை கவர்ந்த நாய் கண்காட்சி


ஏற்காடு கோடை விழா நிறைவு: சுற்றுலா பயணிகளை கவர்ந்த நாய் கண்காட்சி
x
தினத்தந்தி 3 Jun 2019 4:30 AM IST (Updated: 3 Jun 2019 2:19 AM IST)
t-max-icont-min-icon

ஏற்காடு கோடை விழா, மலர்கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. இதையொட்டி நடந்த நாய் கண்காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

ஏற்காடு, 

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 31-ந் தேதி 44-வது கோடை விழா மற்றும் மலர்கண்காட்சி தொடங்கியது. இதையொட்டி அண்ணா பூங்கா திடலில் 2½ லட்சத்திற்கும் மேற்பட்ட வண்ண, வண்ண பூக்கள் 10 ஆயிரம் பூந்தொட்டிகளில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

சுமார் 1 லட்சம் மலர்களை கொண்டு புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரெயில் நிலையம் (சென்னை சென்டிரல்) முகப்பு தோற்றம், விமானி அபிநந்தன் படத்துடன் போர் படை விமானம், பென்குயின் இனிய குடும்பம் உள்ளிட்ட பல்வேறு வகையான உருவங்கள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்பட்டிருந்தன.. சேலம் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு வந்து மலர்கண்காட்சியை கண்டு ரசித்தனர்.

நேற்று முன்தினம் 2-வது நாளில் படகு போட்டி, கொழு, கொழு குழந்தைகள் போட்டி நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கோடை விழாவின் நிறைவு நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதையொட்டி கலையரங்க மைதானத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நாய் கண்காட்சி நடைபெற்றது.

இதில் ஜெர்மன் செப்பர்டு, டாபர்மேன், லேபர் டாக், பக், புல்டாக், பொமேரியன், கிரேடன், பெல்ஜியம் செப்பர்டு, காக்கர், பாக்ஸர், ராட்வீலர், ராஜபாளையம், சிப்பிபாறை உள்ளிட்ட வகைகளை சேர்ந்த 54 நாய்கள் பங்கேற்றன.

அதாவது, கீழ் படிதல், ஓடுதல், தாவி குதித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தி நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன. இதுதவிர, மோப்ப நாய்களின் தனித்திறனை வெளிப்படுத்தும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் சேலம் மத்திய சிறைச்சாலை, ரெயில்வே பாதுகாப்பு படை, சேலம் மாநகர காவல்துறையை சேர்ந்த நாய்கள் பங்கேற்று பல்வேறு சாகசங்களை நிகழ்த்தியது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.

முடிவில், நாய்கண்காட்சியில் ஒட்டுமொத்த சாம்பியனாக சேலம் சபரீசன் என்பவரது கிங் நாய் தேர்வு செய்யப்பட்டது. மேலும், முதல் பரிசு ஏற்காடு ஹரீஸ் என்பவருக்கு சொந்தமான ஜெர்மன் செப்பர்டு இன நாய், 2-வது பரிசு ஏற்காடு வெங்கடேசுக்கு சொந்தமான ஜெர்மன் செப்பர்டு நாய், 3-வது பரிசு ஏற்காடு தமிழ்வாணனுக்கு சொந்தமான ஜெர்மன் செப்பர்டு நாய் தேர்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏற்காட்டில் வழக்கத்தைவிட கூடுதலாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் காணப்பட்டது. அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட், மான் பூங்கா, ரோஜா தோட்டம், சேர்வராயன் கோவில் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவு குவிந்திருந்தனர். மேலும், படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

ஏற்காடு கலையரங்கில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் பரத நாட்டியம், தப்பாட்டம், பூங்கரகாட்டம், தெருக்கூத்து, பல்சுவை நடனம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். கோடை விழா நேற்றுடன் நிறைவடைந்ததால் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வந்திருந்தனர். இதனால் ஏற்காட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா கனிக்கர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story