ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலை தரம் உயர்த்தும் பணி விரைவில் தொடங்கப்படும் அமைச்சர் பேட்டி


ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலை தரம் உயர்த்தும் பணி விரைவில் தொடங்கப்படும் அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 2 Jun 2019 11:00 PM GMT (Updated: 2 Jun 2019 9:07 PM GMT)

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலை தரம் உயர்த்தும் பணி விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கூறினார்.

ஓசூர்,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பிரசித்தி பெற்ற மரகதாம்பிகை சமேத சந்திரசூடேஸ்வரர் மலைக்கோவிலுக்கு தமிழக தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் நேற்று குடும்பத்தினருடன் வந்து சாமி தரிசனம் செய்தார். அமைச்சருக்கு, கோவில் செயல் அலுவலர் ரகுவரராஜ்குமார் மற்றும் பணியாளர்கள், கோவில் அர்ச்சகர் வாசீஸ்வர குருக்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது அமைச்சர் கூறியதாவது:-

ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவிலில் தற்போது பெரிய அளவிலான கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலை தரம் உயர்த்தும் பணி, அரசு சார்பில் விரைவில் தொடங்கப்படும். தமிழகத்தில் நடுகற்கள், வீர கற்கள் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டு, அவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் 2 நாட்களுக்கு ஒரு புதையல் கிடைத்து வருகிறது. பல இடங்களில் வழிபாட்டுக்குரிய வீர கற்கள் கிடைத்து வருகின்றன. இவை அறநிலையத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

91 இடங்களில் புராதன சின்னங்கள் தொல்லியல் துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் 12 புராதன சின்னங்களை பராமரிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. எங்கள் துறையில் நிதிநிலைமை அதிகப்படுத்தும்போது, இந்த 12 புராதன சின்னங்களையும் பராமரிக்க முடியும். தமிழ்நாட்டில் செஞ்சிக்கோட்டை உள்பட 12 கோட்டைகளை மேம்படுத்த 24 கோடிக்கு டெண்டர் வைக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்.

கீழடியில், 5-ம் கட்ட ஆய்வு இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளது. தமிழக அரசு சார்பில், இந்த ஆண்டு கீழடியில் ஒரு அகழ்வைப்பகம் உருவாக்கப்படும். அதேபோல், பொற்கையில் ஒரு அகழ் வைப்பகம், ஆதிச்சநல்லூரில் ஒரு வைப்பகம் என 3 அகழ் வைப்பகங்களும் இந்த ஆண்டு உருவாக்கப்படும். அடுத்த வாரம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரியலூரில் ஒரு அருங்காட்சியகத்தை தொடங்கி வைக்கிறார்.

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பல அரும்பொருட்களை, அறநிலையத்துறையுடன் இணைந்து காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 2 புதிய அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட உள்ளன. கிரு‌‌ஷ்ணகிரியில் உள்ள அருங்காட்சியகத்தை தரம் உயர்த்த இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

ஈரோடு மாவட்டத்தில் நெடுமணல், திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டறை பெரும்புதூர் மற்றும் கீழடியில் மீண்டும் என ஒரே நேரத்தில் 3 இடங்களில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய அரசிடம் இந்த துறைக்காக ரூ. 50 கோடி நிதி கேட்கப்பட்டுள்ளது. நிதி கிடைத்தவுடன், கிரு‌‌ஷ்ணகிரியிலும் அகழ்வாய்வு பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

Next Story