திருப்பூர் ரெயில் நிலையம் அருகே பயங்கரம்: சுமைதூக்கும் தொழிலாளி கத்தியால் குத்திக்கொலை
திருப்பூர் ரெயில் நிலையம் அருகே சுமை தூக்கும் தொழிலாளி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர்,
இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
திருப்பூர் ரெயில் நிலையத்தின் சரக்கு முனையம் அருகில் தண்டவாளம் பகுதியில் கத்திக்குத்து காயங்களுடன் நேற்று ஒருவர் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள், இதுகுறித்து திருப்பூர் ரெயில் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகாமிராணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு இறந்து கிடந்தவரின் ஆடையை பரிசோதித்த போது அதில் 6 செல்போன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் கைப்பற்றினார்கள்.
பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், ரெயில் தண்டவாளம் பகுதியில் இறந்து கிடந்த நபர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த செபஸ்டியான்(வயது 49) என்பதும், அவர் திருப்பூர் காலேஜ் ரோடு கொங்கணகிரி பகுதியில் தங்கி இருந்து ரெயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு சென்ற அவரை ரெயில்வே தண்டவாளம் பகுதியில் வைத்து, யாரோ மர்ம ஆசாமிகள் தலை, முதுகு உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர் மார்பு, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று இருக்கிறார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
செபஸ்டியானை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர்? அவரிடம் 6 செல்போன்கள் எப்படி வந்தது? முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே செபஸ்டியானுடன் இருந்த வாலிபர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த தனிப்படையினர் செபஸ்டியானின் செல்போனுக்கு வந்த அழைப்புகளை வைத்தும், அவருக்கு நெருங்கிய நண்பர்கள், உறவினர்களிடமும் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர். திருப்பூர் ரெயில் நிலையம் அருகே சுமை தூக்கும் தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story