திருப்பூர் மாவட்டத்தில் அதிரடி சோதனை: சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 76 பேர் கைது
திருப்பூர் மாவட்டத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 76 பேரை கைது செய்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி, புகையிலை பொருட்கள் மற்றும் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்பவர்கள், சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து வருகின்றனர். இருப்பினும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு, புகையிலை பொருட்கள் மற்றும் மதுவிற்பனை அதிகரித்து வருவதாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தன.
இந்த புகாரையடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் அவினாசி, காங்கேயம், பல்லடம், உடுமலை, தாராபுரம் உள்ளிட்ட 5 உட்கோட்டங்களில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் கீழ் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இவர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளையும், ரூ.81 ஆயிரத்து 400-ஐயும் பறிமுதல் செய்தனர்.
இதுபோல சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் கீழ் 16 பேரை போலீசார் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து ரூ.18 ஆயிரத்து 330-ஐயும் பறிமுதல் செய்தனர். இதுபோல, பேக்கரிகள், பெட்டிக்கடைகளில் வைத்து புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக 13 வழக்குகள் பதியப்பட்டு, அதன்கீழ் 13 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்ததாக 35 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் இருந்து 218 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி இந்த தனிப்படை குழுவினர் மாவட்டம் முழுவதும் வாகன சோதனையிலும் ஈடுபட்டனர். இதில் மோட்டார் வாகன விதிமீறலில் ஈடுபட்டதாக 80 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மாவட்டம் முழுவதும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக மொத்தம் 76 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story