மகனை தூக்கிலிட்டு துடிதுடிக்க கொலை; நேரில் பார்த்து கதறிய தாய் தற்கொலை கைதான விற்பனை பிரதிநிதி பரபரப்பு வாக்குமூலம்
பெங்களூருவில் மகனை தூக்கிலிட்டு துடிதுடிக்க விற்பனை பிரதிநிதி கொலை செய்தார். இதனை நேரில் பார்த்து கதறிய தாய் தற்கொலை செய்துகொண்டார்.
பெங்களூரு,
பெங்களூருவில் மகனை தூக்கிலிட்டு துடிதுடிக்க விற்பனை பிரதிநிதி கொலை செய்தார். இதனை நேரில் பார்த்து கதறிய தாய் தற்கொலை செய்துகொண்டார்.
இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
தூக்கில் பிணமாக தொங்கிய தாய்-மகன்
பெங்களூரு எச்.ஏ.எல். அருகே உள்ள விபூதிபுராவில் வசித்து வருபவர் சுரேஷ். விற்பனை பிரதிநிதி. இவருடைய மனைவி கீதா பாய் (வயது 35). இவர் வீட்டு வேலை செய்து வந்தார். இந்த தம்பதிக்கு 17 வயது நிரம்பிய மகளும், 12 வயது நிரம்பிய மகனும் இருந்தனர். மகனின் பெயர் வருண்.
இந்த நிலையில் நேற்று சுரேசின் வீட்டில் அவருடைய மனைவி கீதா பாய், மகன் வருண் ஆகியோர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். இதுபற்றி அறிந்தவுடன் எச்.ஏ.எல். போலீசார் அங்கு சென்று கீதா பாய், வருண் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கந்து வட்டி கொடுமை
மேலும் கீதா பாய் எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில், கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்வதாகவும், சிலருடைய பெயர் அதில் இடம் பெற்று இருந்தது. இதுபற்றி போலீசார் விசாரணையை தொடங்கியதோடு, முதற்கட்டமாக சம்பவம் குறித்து சுரேஷ், அவருடைய மகள் ஆகியோரிடம் போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்.
இந்த விசாரணையின்போது சுரேஷ் போலீசாரிடம், ‘சுதா என்பவரிடம் இருந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு கீதா பாய் ரூ.40 ஆயிரம் கடன் வாங்கினார். இந்த கடனை வட்டியுடன் திரும்ப செலுத்தியபோதிலும் கீதா பாயிடம் அவர்கள் தொடர்ந்து கந்துவட்டி வசூலித்தார். இதனால், மனம் உடைந்த கீதா பாய் தனது மகன் வருணுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டார்’ என்று கூறினார்.
பதறவைக்கும் வீடியோ
இதற்கிடையே, நெஞ்சை பதறவைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது. அந்த வீடியோவில், மகன் வருணை துடிக்க துடிக்க தந்தை சுரேஷ் கழுத்தை இறுக்கி தூக்கில் தொங்க விடுகிறார். வருண் ‘விட்டு விடுங்கள் அப்பா...’ என கதறியும் சுரேஷ் தனது முடிவை மாற்றவில்லை.
இதற்கிடையே, வருண் துடிப்பதை பார்த்த கீதா பாய் கண்ணீர் வடித்து கதறியபடி வீட்டில் அங்கும், இங்குமாக ஓடுகிறார். இறுதியில் சுரேஷ் தனது மகன் வருணை தூக்கிலிட்டு துடிக்க துடிக்க கொன்று விடும் காட்சிகள் வீடியோவில் இடம் பெற்றுள்ளன. இதனை பார்த்து கதறி அழுத கீதா பாயும் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
குடும்பத்துடன் தற்கொலை முடிவு
இந்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் போலீசார் சுரேசை கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். இந்த விசாரணையின்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுகுறித்து, ஒயிட்பீல்டு துணை போலீஸ் கமிஷனர் அப்துல் அகாத் கூறுகையில், ‘சம்பவம் தொடர்பாக சுரேசை கைது செய்து விசாரித்து வருகிறோம். விசாரணையில், சுரேசும், கீதா பாயும் சிட்பண்ட் நடத்தி வந்தனர். இதில் அவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கந்துவட்டி கொடுமையால் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள அவர்கள் முடிவு செய்துள்ளதாக சுரேஷ் கூறினார். இதற்காக முதலில் மகன் வருணை தூக்கிலிட்டு அவர் கொன்றுள்ளார். இதையடுத்து மனைவி கீதா பாய் தற்கொலை செய்து கொண்டார். அதைத்தொடர்ந்து தற்கொலை செய்ய தான் (சுரேஷ்) முயன்றதாகவும், அதை மகள் தடுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார். பின்னர் அவர்கள் 2 பேரும் தற்கொலை முடிவை கைவிட்டுள்ளனர். முன்னதாக, மகனை கொன்றபோது அதை அவருடைய மகள் வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ வெளியாகி உள்ளது’ என்றார்.
இதுகுறித்து எச்.ஏ.எல். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story