மடத்துக்குளம் போலீஸ் நிலையம் முன்பு வீடியோ எடுத்த வாலிபர் கைது


மடத்துக்குளம் போலீஸ் நிலையம் முன்பு வீடியோ எடுத்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 3 Jun 2019 4:00 AM IST (Updated: 3 Jun 2019 2:42 AM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளம் போலீஸ் நிலையம் முன்பு வீடியோ எடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மடத்துக்குளம்,

மடத்துக்குளம் போலீஸ் நிலையம் முன்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வாலிபர்கள் 2 பேர் நின்று கொண்டு அதை வீடியோவாக பதிவு செய்து டிக்-டாக் செயலியில் பதிவேற்றம் செய்தனர். அந்த வீடியோவில் சாட்சி சொன்னால் கோர்ட்டு வாசலிலேயே வெட்டுவேன் என்ற பாடல் வரிகளுடன் பதிவு செய்து இருந்தனர். இந்த டிக்-டாக் வீடியோ சமூக வலைத் தளங்களில் வேகமாக பரவியது.

அதை பார்த்த மடத்துக்குளம் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த வீடியோவை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தவர் யார்? அந்த வீடியோவில் இருந்த வாலிபர்கள் யார்? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். சமூக நல ஆர்வலர்களும், காவல்துறையின் நன்மதிப்பை சீர்குலைக்கும் விதத்தில் வீடியோவில் நடித்த வாலிபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள். மடத்துக்குளம் போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே ஒரு வாலிபர் வரும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகி இருந்ததால் சம்பந்தப்பட்ட நபர் மடத்துக்குளம் பகுதியை சேர்ந்தவராக இருக்க கூடும் என போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

போலீசார் நடத்திய விசாரணையில் மடத்துக்குளம் அருகே உள்ள கணியூர் மதியழகன் நகரை சேர்ந்த துரைபாண்டி(வயது 25), பிரகா‌‌ஷ்(24) என தெரிய வந்தது. இதில் துரைபாண்டியை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கைததான துரைபாண்டியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி உடுமலை கிளை சிறையில் அடைத்தனர். மற்றொரு வாலிபரான பிரகாஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story