ரெயில்வே வேலைவாய்ப்பில் தமிழக மக்கள் புறக்கணிக்கப்பட மாட்டார்கள் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


ரெயில்வே வேலைவாய்ப்பில் தமிழக மக்கள் புறக்கணிக்கப்பட மாட்டார்கள் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 2 Jun 2019 11:30 PM GMT (Updated: 2 Jun 2019 9:16 PM GMT)

ரெயில்வே வேலைவாய்ப்பில் தமிழக மக்கள் புறக்கணிக்கப்பட மாட்டார்கள் என்று பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

தூத்துக்குடி, 

பா.ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இன்றைய காலகட்டத்தில் ஒரு ஆக்கப்பூர்வமான அரசியலை நோக்கி பா.ஜனதா கட்சி தமிழகத்தை எடுத்து செல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் தோற்றாலும், இந்த பகுதி மக்களுடன் கொண்ட தொடர்பால், சுமார் 2½ லட்சம் பேர் என்னை ஆதரித்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன். வாக்களிக்காத மக்களுக்கும் நாங்கள் நன்றியுடன்தான் இருப்போம். ஏனென்றால் வருங்காலம் எங்களுடையது என்பது எனக்கு நன்றாக தெரியும். இந்த பகுதி மக்களுக்கு என்னென்ன தேவையோ, அதனை நிறைவேற்ற நான் பாடுபடுவேன்.

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கு கலெக்டரிடம் மனு கொடுத்து உள்ளார். தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தான் சாராய ஆலைகள் வைத்து உள்ளார்கள். அந்த ஆலைகளை முதலில் மூட வேண்டும். வெற்றி பெற்றால் சாராய ஆலைகளை மூடுவோம் என்று கூறினீர்கள். அதேபோன்று தி.மு.க.வில் யாரெல்லாம் சாராய ஆலை நடத்தி வருகிறார்களோ அதனை மூட வேண்டும்.

தமிழகத்தில் உள்ள ஸ்டெர்லைட் உள்பட பெரிய பெரிய பிரச்சினைகளுக்கு காரணம் அவர்கள்தான். அதனை ஆரம்பித்ததும் அவர்கள்தான், விரிவாக்கம் செய்ததும் அவர்கள்தான். அனுபவித்ததும் அவர்கள்தான். டி.ஆர்.பாலு மீத்தேனை நானும், பழனிமாணிக்கமும்தான் கொண்டு வந்தோம் என்று கூறி உள்ளார். ஆனால் தற்போது அதனை எங்களை நோக்கி திருப்பி விட்டு இருக்கிறார்கள்.

அதேபோன்றுதான் மும்மொழி கொள்கையும், புதிய கல்விக்கொள்கையும் எப்படி இருக்க வேண்டும் என்று ஒரு குழுவால் விசாரணை நடத்தப்பட்டு கருத்து கொடுக்கப்பட்டு உள்ளது. உடனடியாக இந்தி திணிக்கப்படுவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். தி.மு.க.வில் டெல்லி செல்லும் பாதி பேர் இந்தி படித்தவர்கள்தான். அவர்கள், இல்லாத இந்தி திணிப்பை எதிர்த்து ஒரு போராட்டத்தை முன்னெடுத்து செல்கிறார்கள். இனிமேல் இதுபோன்ற பொய்யான தகவல்கள் பரப்புவதை பா.ஜனதா கட்சி ஒருபோதும் ஒப்புக்கொள்ளாது.

ரெயில்வேயில் தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்துதான் பழகுனர் பயிற்சிக்கு ஆட்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதன்படி தற்போது ரெயில்வே அறிவித்து உள்ளது. அதேபோன்று வெளிமாநிலங்களில் இருந்து சில தொழில்நுட்ப காரணங்களுக்காக தேர்வு செய்யப்பட்டு இருக்கலாம். எந்த விதத்திலும் தமிழக மக்கள் புறக்கணிக்கப்பட மாட்டார்கள். புறக்கணிக்கப்பட்டு வருவது கவனத்துக்கு வந்தால், அவர்களுக்கு என்ன அங்கீகாரம் கிடைக்க வேண்டுமோ, அது கிடைப்பதற்கான முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ரெயில்வே மந்திரி பியூஸ் கோயலிடம், மணியாச்சி ரெயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும், தூத்துக்குடி-மணியாச்சி இடையே ரெயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளேன். தி.மு.க. எம்.பி.க்கள் டெல்லி செல்வார்கள். அங்கும் அவர்கள் வெளிநடப்புதான் செய்வார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் தமிழிசை சவுந்தரராஜன் தனது பிறந்தநாளையொட்டி, விமான நிலைய வளாகத்தில் ‘கேக்‘ வெட்டி கட்சியினருக்கு வழங்கி கொண்டாடினார். நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் பாலாஜி, தேசிய செயற்குழு உறுப்பினர் சந்தணகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story